இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் முதற்தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கையர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி இதனைக் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சீனப் பெண், கடும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண்ணுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை சிறந்த முறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், குறித்த நோயாளருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அங்கி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சிகிச்சைகளுக்காக செல்வோர் தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அங்கிகளை அணிந்த வகையிலேயே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலக சுகாதார நிறுவனம் மூலம் மேலும் பல பாதுகாப்பு அங்கிகள் எதிர்வரும் சில தினங்களுக்குள் கிடைக்கவுள்ளதாகவும், அவை கிடைத்தவுடன் ஏனைய மருத்துவமனைகளுக்கு அவற்றை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக 12 மருத்துவமனைகள் நாடு முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அங்கொடை தொற்று நோய் மருத்துவமனை, வட கொழும்பு மருத்துவமனை, கராபிட்டிய மருத்துவமனை, நீர்கொழும்பு மருத்துவமனை, கம்பஹா மருத்துவமனை, கண்டிமருத்துவமனை, அனுராதபுரம் மருத்துவமனை, யாழ்ப்பாணம் மருத்துவமனை, குருநாகல் மருத்துவமனை, ரத்தினபுரி மருத்துவமனை, மட்டக்களப்பு மருத்துவமனை, பதுளை மருத்துவமனை ஆகியமருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
இலங்கையின் பிரதான விமான நிலையங்களுக்குள் வருகைத் தரும் விமான பயணிகள் கடும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சீன நாட்டவர்கள் விமான நிலையத்தில் நுழைவதற்கு தனி நுழைவுப்பகுதி நிறுவப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் அங்கொடை தொற்று நோய் மருத்துவமனைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் பிரவேசிக்கும் சீன நாட்டவர்கள், சீன மொழியில் வழங்கப்படும் விண்ணப்பப்படிவத்தை நிரப்புவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இலங்கைக்கு வருகைத் தரும் கப்பல்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்பாகவே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் இந்திய விமானங்கள் மற்றும் விமான பயணிகள் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
சீன நாட்டவர்கள் தங்கியுள்ள அனைத்து இடங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சீன பயணிகளுக்கான உடனடி விசா நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இணையத்தளம் மூலம் விண்ணப்பிப்பதன் ஊடாகவே சீன குடிமக்களுக்கான விசா இனிவரும் காலங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவிலுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
சீனாவிலிருந்து அழைத்துவரப்படும் இலங்கையர்கள் பதுளை - தியதலாவை பகுதியிலுள்ள ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள விசேட முகாமொன்றிற்கு உடனடியாக அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.
குறிப்பாக சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து வருகை தரும் அனைத்து இலங்கை மாணவர்களும் தியத்தலாவை முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையிலுள்ள சீன குடிமக்கள், இலங்கைக்குள் வருகைத் தரும் சீன குடிமக்கள் என அனைவரும் அவர்கள் வாழும் பகுதிகளிலுள்ள மருத்துவ அதிகாரிகள் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கருத்துகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
போலியான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றமையினால், மக்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை பொதுமக்களுக்கு பெற்றுக் கொள்ள விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 0710107107, 0113071073 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பொதுமக்கள் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment
Post a Comment