மட்டக்களப்பின் வெள்ள நிலைமை




மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக 8 பிரதேச செயலாளர் பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரையில் 1651 குடும்பங்களை சேர்ந்த 5774 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 53 குடும்பங்களை சேர்ந்த 196 குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில் இரண்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்து பிரிவுகள் தெரிவித்துள்ளன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கர்பலாநகர் ஆகிய பகுதிகளிலேயே இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் இடம்பெயர்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுவதுடன் சுகாதார பிரிவினரால் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேநேரம் கடும் மழையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏழு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று போக்குவரத்து பாதைகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதி,ராணமடு-மாலையர்கட்டு போக்குவரத்து பிரதான வீதி மற்றும் கிராண் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராணுக்கும் படுவான்கரைக்கும் இடையிலான போக்குவரத்து வீதியின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பின் பிரதான குளங்களான உன்னிச்சைகுளம், நவகிரிகுளம், புலுக்குணாவகுளம் ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-