லண்டனிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் கலந்துக்கொண்டவர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை குற்றவாளியாக அந்த நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
லண்டனிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு தொடர்பிலான ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியந்த பெர்ணான்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைகள் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதியான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான வழங்கு விசாரணைகளை சிரேஷ்ட மாவட்ட நீதிபதி எமா அர்பத்தொட் நடத்தியிருந்ததுடன், அவர் அதற்கான தீர்ப்பை வழங்கியிருந்தார்.
குறித்த பிரிகேடியர் குற்றவாளியாக அடையாளம் காணப்படுவதுடன், அவர் ராஜதந்திர அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
குறித்த தினத்தில் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தமிழர்கள் சிலர் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் ராணுவ சீருடையில் இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை வெட்டும் வகையிலான விரல்களின் மூலம் சமிக்ஞையை மூன்று தடவைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி காண்பித்ததாகவும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரியின் குறித்த நடவடிக்கையானது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு, குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதிவாதியான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவினால் அங்கிருந்த நபர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமையானது, பிரித்தானியாவின் சமூக சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாக்கும் சட்டத்தின் (Public Order Act 1986 ) பிரகாரம் அது தவறான நடைமுறை என நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ வெஸ்மினிஸ்டர் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாகாத நிலையில், இலங்கை அரசாங்கம் சார்பில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே நீதிமன்றத்திற்கு இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் தேதி லண்டனிலுள்ள உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த சம்பவமானது, பிரித்தானியாவில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது.
இதையடுத்து, குறித்த அதிகாரியை அந்த பதவியிலிருந்து விலக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது.
இதையடுத்து, குறித்த அதிகாரி இலங்கைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவரின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டதாக அப்போதைய இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்திருந்தார்.
ராஜதந்திர அதிகாரியொருவருக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த அதிகாரி குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டதுடன், அதற்கான அவரிடமிருந்து 2000 ஸ்டேலின் பவுண்களை அபராதமாக அறவிடவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், வழக்கு கட்டணம், மேலதிக கட்டணம், நட்டஈடு என மொத்தமாக 4419.80 ஸ்டேலின் பவுண்களை அபராதமாக அறவிடுமாறும் குறித்த அதிகாரிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Post a Comment
Post a Comment