ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 7,417 குடும்பங்களைச் சேர்ந்த 24,529 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 46 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் இடம்பெயர்ந்து, உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
ஆலையடிவேம்பு பிரதே செயலகத்துக்குட்பட்ட 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுமிருந்து கிராம உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, இத்தகவல் பெறப்பட்டுள்ளதாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படுவதற்கான நடவடிக்கை, பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை மாவட்ட செயலகத்தில் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர் கூறினார்.
தொடரும் நாள்களில் மழைவீழ்ச்சி அதிகரித்து, வெள்ள அனர்த்தம் அதிகமாக ஏற்படும் பட்சத்தில், அதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பணிகளை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்க ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழ் நிலப்பிரதேசங்களும் ஆலயங்களும் குடியிருப்புகளும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஆயினும், தாழ் நிலப்பிரதேசங்களில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் பிரதேச சபை ஊடாகத் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.
Post a Comment
Post a Comment