இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஏற்கனவே 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் இரண்டு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்துக்கான ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இதேவேளை புதிய ஜனாதிபதி நியமித்துள்ள 8 ஆளுநர்களில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட டாக்டர் சீதா அரபேபொல, கிழக்கு மாகாண ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ள அனுராதா யஹம்பத் ஆகியோரே பெண் ஆளுநர்களாவர்.
மேல் மாகாண ஆளுநர் டாக்டர் சீதா அரபேபொல தொழில் ரீதியாக , காது, மூக்கு, தொண்டை (ENT) சத்திரசிகிச்சை நிபுணராவர். அதேபோன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்
மேல் மாகாணம் - டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் - லலித் யு கமகே
ஊவா மாகாணம் - ராஜா கொல்லூரே
தென் மாகாணம் - டாக்டர் வில்லி கமகே
வடமேல் மாகாண - ஏ.ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் - டிகிரி கொப்பேகடுவ
Post a Comment
Post a Comment