நீதிமன்றை நாடவுள்ளார்




நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக  நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், தான்  44 வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து வருவதாகவும் அத்துடன் நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தாதாகவும் தெரிவித்தார்.
கட்சி உறுப்புரிமைக்கான, கட்டணங்களைக்கூட தான் தவறாது செலுத்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கட்சியைவிட்டு விலகுமாறு, முறையாக வேண்டுகோள் விடுத்திருந்தால், தான் விலகுவதற்கு தயங்கி இருக்கப்போவதில்லை என்றும் ஆனால், தனக்கு அசாதாரணம் இழைப்பதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சாடினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாய்ப்பளிப்பதற்காகவே தனது நாடாளுமன்றப் பதவியைப் பறிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனை முறைப்படிக் கேட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.