ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
தற்போது மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைதராபாத் போலீஸ் ஆணையர் வி.சி.சஜநார், "குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் சத்தன்பல்லியில் அதிகாலை மூன்று 3 மணி முதல் 6 மணி வரையளவில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நான் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளேன்; மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படும்," என தெரிவித்தார்.
என்ன சொல்கிறார் கொலைசெய்யப்பட்ட மருத்துவரின் தந்தை
"எனது மகள் இறந்து இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. காவல்துறைக்கும் அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும்," என கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு
இந்த என்கவுண்டர் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் பலர் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
"இவர்கள்தான் குற்றம் செய்த புரிந்தனர் என்று சொல்வதற்கு நம்மிடம் போதிய ஆதாரங்கள் உள்ளனவா? எந்த நீதிமன்றமாவது அந்த ஆதாரத்தை பார்த்ததா? எந்த நீதிமன்றமாவது தீர்ப்பு வழங்கியதா? அவர்கள் குற்றம் செய்ததாக நாமாக நினைத்துக் கொள்கிறோம். எதற்குமே ஒரு முறை உண்டு" என மனித உரிமை ஆர்வலர் ரபேக்கா மாமென் ஜான் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்ன நடந்தது?
கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.
Post a Comment
Post a Comment