(அஸ்லம் எஸ்.மௌலானா)
தற்போது பெய்து வருகின்ற பெருமழை காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த அபாயத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் அவசர உத்தரவின் பேரில் அப்பகுதி தோணா முகத்துவாரம் இன்று திங்கள் பிற்பகல் கல்முனை மாநகர சபையினால் தோண்டப்பட்டு, வெள்ள நீர் கடலுக்கு அனுப்பப்படுகிறது.
மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் அவர்களின் வழிகாட்டலில் மாநகர சபையின் சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே.காலிதீன் அவர்களின் மேற்பார்வையில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை நேற்று இரவு பெய்த பெரு மழை காரணமாக மருதமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு போன்ற பிரதேசங்களில் சில இடங்களில் நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் ஏற்பட்ட வெள்ள அனர்த்த அபாயத்தையடுத்து, மாநகர முதல்வர் றகீப் அவர்கள் மாநகர சபை பணியாட்களுடன் நேரடியாக களமிறங்கி, வெள்ள நீரை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
கல்முனையில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய வேறு சில இடங்களையும் இன்று காலை தொடக்கம் நேரடியாக சென்று பார்வையிட்ட முதல்வர் றகீப், வெள்ள அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களை அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதைய பருவ மழை காலநிலையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர முதல்வரினால் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு, கல்முனை மாநகர பிரதேசங்களில் இயற்கை அனர்த்த அபாய பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் இந்நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக கல்முனை மாநகர சபை ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment