அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அதிரடி




டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கபட்டு சுமார் ஒரு வருடகாலமாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு உடனடியாக வீடமைப்பு திட்டத்தினை ஆரம்பிக்கும் பணியினை முன்னெடுக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (23) குறித்த தோட்டப்பகுதிக்கு சென்று பாதிக்கபட்ட மக்களை சந்தித்த போது உரிய அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்தார்.

இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், எஸ்.பிலிப், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுசியா சிவராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் என பலரும் சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு மக்களோடு மேலும் கலந்துரையாடிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,

போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதியில் தீடீர் என ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 24 குடியிருப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தமது உடமைகளை இழந்து ஒரு வருடகாலமாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வந்ததை நான் அறிவேன்.

ஆனால் அவர்களுக்கு ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.

இன்று எமது அரசாங்கத்தின் ஊடாக இந்த மக்களுக்கு முறையான வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்ள எம்மால் முடியும்.

ஆகையால் தான் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

இதுவரை காலமும் இந்த மக்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று கொடுக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மலைய மக்கள் இனி மேலும் எவருக்கும் அச்சமடைய தேவையில்லை.

எதிர்வரும் காலங்களில் மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றார்

-மலையக நிருபர் சதீஸ்குமார்-