இந்தியாவின் புதிய வரைபடத்தை நிராகரித்தது பாகிஸ்தான்




நவம்பர் 2ஆம் தேதியன்று இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய இந்திய வரைபடத்தை நிராகரிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
புது வரைபடத்தில் லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில் மற்றும் லே ஆகிய இரண்டு மாவட்டங்கள் இருக்கிறது. மீதமுள்ள 26 மாவட்டங்கள் ஜம்மு காஷ்மீரில் இருக்கும்.
இந்த புதிய வரைபடம் தவறானது என்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும் ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தின் தீர்மானங்களை மீறியது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையால், அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான ஜம்மு காஷ்மீரின் அந்தஸ்த்தை இந்தியாவின் எந்த நடவடிக்கையாலும் மாற்ற முடியாது என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதி மக்களின் உரிமையில் இந்திய அரசு பாரபட்சம் காட்ட முடியாது என்றும் அந்நாடு தெரிவித்திருக்கிறது.
உண்மையாக தங்கள் உரிமைக்காக போராடும் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மக்களின் போராட்டத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் புது வரைபடத்தை இந்திய சர்வே ஜெனரல் தயாரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசாங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மேற்பார்வையில் ஜம்மு காஷ்மீர், லடாக் எல்லைகள் வகுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய வரைபடத்தின்படி இந்தியாவில் 28 மாநிலங்களும், ஒன்பது யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன.
ஐம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை தந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35 A ஆகிய இரு பிரிவுகளும் கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
Presentational grey line

Presentational grey line
1947ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தது. கத்துவா, ஜம்மு, உதம்பூர், ரைசி, அனந்தநாக், பாராமுல்லா, பூன்ஞ், மிர்பூர், முசாஃபர்பாத், லே லதாக், கில்கிட், கில்கிட் வசாரத், சில்லா மற்றும் பழங்குடியின எல்லை.
2019ஆம் ஆண்டு தற்போது மறுசீரமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் இந்த 14 மாவட்டங்கள் 28 மாவட்டங்களாக ஆகியிருக்கின்றன.
குப்வாரா, பந்திபூர், பல்லார்பல், ஸ்ரீநகர், புட்காம், புல்வாமா, சோபியன், குல்கம், ரஜௌரி, தோடா, கிஷ்த்வர், சம்பா, போன்ற புதிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.