புத்தளம் - முந்தல் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு வாகனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றை நடத்தி மீண்டும் வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவ இடத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பா க அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரிஷாட் பதியூதீன் பதில்
புதிய அரசாங்கம் ஆட்சி பீடத்திற்கு ஏறி ஒரு வார காலத்திற்குள் கட்சியொன்றின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வீதியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.
வீதியில் செல்ல முடியாதளவிற்கு கடும் மோசமான ஆட்சியொன்றே தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான தவறுகளை உடனடியாக திருத்திக் கொள்ளாத பட்சத்தில், நாடு தவறான வழியிலேயே செல்லும் என அவர் கூறினார்.
மக்கள் விரைவில் இதற்கான பதிலை வழங்குவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.
விசாரணை ஆரம்பம்
இந்த தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தரப்பினர் முந்தல் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முந்தல் பொலிஸார் கூறுகின்றனர்.
Post a Comment
Post a Comment