ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் : ''என் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டாள்''




சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை கொண்டது போல தெரியவில்லை என்றும் அவரது மரணத்திற்கு ஒரு பேராசிரியர்தான் காரணம் என்றும் அவரது தந்தை அப்துல் லத்தீப் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி பாத்திமா கடந்த சனிக்கிழமையன்று இறந்ததை அடுத்து, அவரது மரணம் சந்தேக மரணம் என வழக்கு பதிவாகியுள்ள நிலையில், அவரது தந்தை தனது மகளின் இறப்பு தற்கொலை போல தெரியவில்லை என்றும் அதற்கான ஆதாரங்களை தமிழக காவல்துறை இயக்குனர் திரிபாதியிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் லத்தீப் தனது மகளின் இறப்பில் சந்தேகங்கள் உள்ளன என்றார்.
''பாத்திமா தற்கொலை செய்துகொள்ள கயிறு எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. பாத்திமா இறக்கும் நேரத்திற்கு முன் எங்கு சென்றார் என்பதை காட்டும் சிசிடிவி காட்சிகளை எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்பித்துள்ளேன். தமிழக அரசு மற்றும் காவல்துறை இயக்குனர் மீது நம்பிகை உள்ளது. என் மகளுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்,'' என்று தெரிவித்தார்.
''என் மகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதால் பிற மாணவர்கள் யாரும் இதுபோன்ற நிலைக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக விவரங்களை வெளியிட்டுள்ளேன். என் மகள் ஏற்கனவே தாயிடம் பேசும்போது ஒரு பேராசிரியரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். என் மகளுக்கு நீதி வேண்டும்,'' என்றார் லத்தீப்.
மாணவி மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என டிஜிபி உறுதியளித்துள்ளார் என்று லத்தீப் தெரிவித்தார்.
மேலும் பாத்திமாவின் செல்போன் காவல் துறையினரிடம் இருப்பதால், அதனை பெற்றோர் முன்னிலையில் திறக்கவேண்டும் என்றும் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐஐடி நிர்வாகம் கூறுவது என்ன ?

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், மௌனம் காத்த ஐஐடி நிர்வாகம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸில் மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்துவந்த மாணவி பாத்திமா லத்தீப், நவம்பர் 9ம்தேதி உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்திற்கு மதரீதியான பாரபட்சம் காரணமாக இருக்கக்கூடும் என மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
ஐஐடி போராட்டம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பலரும் பாத்திமாவுக்கு அவர் பயின்ற துறையில் உள்ள பேராசிரியர்கள் மத ரீதியான பாரபட்சம் காட்டியதாக குற்றஞ்சாட்டி சமூகவலைத்தளங்களில் ''ஜஸ்டிஸ் பாஃர் பாத்திமா''(Justice for Fathima) என்ற பெயரில் பதிவுகள் எழுதிவருகின்றனர்.
வெள்ளிக்கிழமை அன்று ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விசாரணைக்கு எல்லா விதமான ஒத்துழைப்பு தரப்படுவதாகவும், நிர்வாகத்தை பற்றி சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் கருத்துக்கள் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IIT MADRAS
''எங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர்தரமானவர்கள், நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். மாணவியின் இழப்புக்காக தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறோம். எங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனை உறுதிப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். விசாரணை முழுமையாக முடியும்வரை வதந்திகளை பரப்பவேண்டாம்,''என ஐஐடி நிர்வாகம் அளித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்னை வந்துள்ளார். மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் இதுபோன்ற தற்கொலைகள் நடைபெறக்கூடாது என பாத்திமாவின் பெற்றோர்கள் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.