இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கின்றனர்




இலங்கை எட்டாவது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 5 மணி வரை இடம்பெறும் என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.
இந்த முறை 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 096 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாட்டிலேயே அதிகப்படியான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில், தமிழர்கள் செறிந்து வாழும் திருகோணமலையிலேயே குறைவான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 17 லட்சத்து 51 ஆயிரத்து 892 வாக்காளர்கள் பதிவாகியுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 114 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்காளர் விவரம்

தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 20 லட்சத்து 30 ஆயிரத்து 038 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளர்.
கிழக்கு மாகாணத்தில் 11 லட்சத்து 83 ஆயிரத்து 205 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 301 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5 லட்சத்து 03 ஆயிரத்து 790 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 114 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டும் 1,258 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் 523 வாக்களிப்பு நிலையங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 வாக்களிப்பு நிலையங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 307 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களுக்குள் செயற்படும் விதம்

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்குள் செயற்படும் விதம் தொடர்பிலான விடயங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது.
  • வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் போது, வித்தியாசமான கண்ணாடிகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • வாக்களிப்பு நிலையங்களில்காணொளி அல்லது புகைப்படம் எடுப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
  • முகத்தை முழுமையாக மூடி வாக்களிப்பு நிலையத்திற்குள் செல்வதற்கு தடை .
  • அனுமதி வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகளுக்கு வாக்களிப்பு நிலையங்களுக்குள் துப்பாக்கி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • வாக்காளர்கள் வாக்குச்சீட்டுடன், தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்

தேர்தல் பிரசாரத்திற்கு தடை

தேர்தல் அமைதி காலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில தரப்பினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.
சமய நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவற்றை நிறுத்துமாறு அவர் வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.

வாக்களிப்பது எப்படி?

வாக்கு சீட்டில் வாக்காளர் தெரிவு செய்யும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு முன்பாக ஒரு புள்ளி இட வேண்டும்.
அவ்வாறு இல்லையென்றால், வாக்காளர்களுக்கு மூன்று தெரிவுகள் காணப்படுமாயின், வேட்பாளர்கள் மூவரின் பெயர் மற்றும் சின்னங்களுக்கு முன்பாக ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கங்களில் எழுத வேண்டும்.
அவ்வாறின்றி வேறு விதத்தில் அடையாளங்களோ அல்லது பல புள்ளிகளோ இடும் பட்சத்தில், அது நிராகரிக்கப்பட்ட வாக்காக பதிவாகும்.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

பாதுகாப்பு நடவடிக்கைகள்

வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பிற்காக போலீஸ், போலீஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
இதன்படி, 60,000க்கும் அதிகமான பாதுகாப்பு பிரிவினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், போலீஸ் கலகத்தடுப்பு பிரிவினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், தேவை ஏற்படின் ராணுவ பாதுகாப்பும் வழங்கப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது.