இளம் பெண்களுக்கான மாரடைப்பு.. தடுப்பது எப்படி?




``மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மட்டுமல்லாமல் எதிர்மறை எண்ணங்களும்கூட மாரடைப்பு வருவதற்கு வழிவகுக்கும்'' என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். முன்பு, 50 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வந்துகொண்டிருந்த மாரடைப்பு, இப்போது 20 வயதினரையும் விட்டுவைக்கவில்லை. இப்போது, இளம் பெண்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து இதயநோய் நிபுணர் வி.சொக்கலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம். விரிவான விளக்கம் அளித்தார் அவர்.
இளம் பெண்களுக்கும் மாரடைப்பு வருகிறதே... தடுப்பது எப்படி?
பெண்களுக்கு மாதவிடாய் இருக்கின்றவரை, 10 ஆண்களுக்கு ஒரு பெண் வீதம் மாரடைப்பு வரும். மாதவிடாய் நின்ற பிறகு 40, 45 வயது ஆகிவிட்டால், ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் மாரடைப்பு வரும். பொதுவாகப் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகச் சுரக்கும். இதற்கு, மாரடைப்பைத் தடுக்கின்ற சக்தி உண்டு.
Heart Attack
Heart Attack
pixabay
ஈஸ்ட்ரோஜென் குறைபாடு ஏற்படும் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன. எதிர்மறை எண்ணங்களும் வாழ்க்கைமுறையும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் சில பெண்களிடம் உள்ளதால், 20-25 வயதிலேயே மாரடைப்பு வருகிறது. இந்தியாவில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 90 பேர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர்
முதல் மாரடைப்பு வந்த பின், இரண்டாவது மாரடைப்பு வந்தால் இறந்துவிடுவோம் என்ற பயம் நோயாளிகளிடம் இருக்கிறது. காப்பாற்ற வழி உண்டா?
“உலக அளவில் சுமார் 100 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அதில் 30 பேர் ஒரே நிமிடத்தில் உயிரிழந்துவிடுவார்கள். அவர்களை டாக்டர்கள் அருகிலிருந்தாலும் காப்பாற்ற இயலாது. 100 பேரில் 30 பேர் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டுமென்றால், மாரடைப்பு எனும் கொடிய நோயை ஒழிக்கவேண்டியது அவசியம்.
Heart Attack
Heart Attack
pixabay
முதல் அட்டாக் வந்த பின், அவர்கள் மருத்துவரிடம் சென்று, அவர் கூறும் வழிமுறைகளைத் தொடர்ந்து சரியாகக் கடைப்பிடித்தால், இரண்டாவது அட்டாக் வராது. ஒருவருக்கு 35 வயதில் மாரடைப்பு வந்தால், அதற்காக அவர் கவலைப்படக்கூடாது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து வெளியே வர முயல வேண்டும்.

அப்படிச் செய்தால், அவர்களும் 90 வயதுவரை வாழ முடியும். மூன்று அட்டாக் வந்து, நான்காவது அட்டாக் வந்தால் இறந்துவிடுவோம் என்று சிலர் நம்புகின்றனர். அப்படியெல்லாம் இல்லை. சிலர், 30 அட்டாக் வந்த பின்னரும் உயிருடன் இருக்கிறார்கள். ஒரு மனிதனின் இதயம் 125 வருடங்கள் வரை ஆரோக்கியமாக இருக்குமாறு இயற்கை படைத்திருக்கிறது.”
இதயநோய் நிபுணர் வி.சொக்கலிங்கம்
உணவில் ஆலிவ் ஆயில் சேர்த்தால் மாரடைப்பைத் தடுக்கலாம் என்பது உண்மையா?
“நம்முடைய உடலுக்கு எண்ணெய் மிக மிக முக்கியம். கொழுப்பு, புரதம், மாவுச்சத்து போன்றவை இன்றியமையாதவை. இந்த மூன்றையும் கலவையாகச் சாப்பிட வேண்டும்.
ஆனால், எப்போதெல்லாம் எண்ணெய் அதிகமாக உட்கொள்கிறீர்களோ அப்போதுதான் அது ஆபத்தாக மாறிவிடுகிறது. எந்த எண்ணெய்யெல்லாம் வெளியில் வைத்தால் உறைகின்றனவோ, குறிப்பாகத் தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும்போது, இவற்றிலுள்ள கொழுப்பு ரத்தக்குழாய்களில் படிந்துவிடுகிறது. அது, மாரடைப்புக்கு வழி அமைத்துக் கொடுத்துவிடுகிறது.
Olive Oil
Olive Oil
எந்த எண்ணெய்யெல்லாம் வெளியில் வைத்தால் உறையாமல் இருக்கின்றனவோ, முக்கியமாக நல்லெண்ணெய், அரிசித்தவிட்டு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை அளவோடு சாப்பிடலாம். இந்த எண்ணெய் வகைகள், கொலஸ்ட்ரால் கூடாமல் தடுப்பதோடு ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமலும் பார்த்துக்கொள்ளும்” என்கிறார், வி.சொக்கலிங்கம்.