அத தெரணவின், போலிச் செய்தி




இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை 8 ரூபாய் 50 பைசா நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுந்தகவல்கள் ஊடாக இன்று காலை முதல் செய்திகள் பகிரப்பட்டன.
இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊடக நிறுவனங்கள் இரண்டு இந்த செய்தியை தமது குறுந்தகவல் சேவையூடாகவும், தமது உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களின் ஊடாகவும் வெளியிட்டிருந்தன.

நிதி அமைச்சின் பதில்

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார்.
கோதுமைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையானது சட்டவிரோதமான செயற்பாடு எனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில்

நுகர்வோர் விவகார அதிகார சபையின் கீழ் காணப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களுக்குள் அடங்கும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 87 ரூபாய் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிடுகின்றது.
இந்த நிலையில், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமாயின், கோதுமை மாவின் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியது.
குறுஞ்செய்திபடத்தின் காப்புரிமைDERENA SMS NEWS
எனினும், கோதுமை மாவின் விலை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை என அந்த அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விடவும் அதிக விலைக்கு கோதுமை மாவு விற்பனை செய்யப்படுமாயின், அது சட்டவிரோதமான செயற்பாடு என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை உரிய நிறுவனங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும், அவ்வாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியின்றி விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில் தாம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவிக்கின்றது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைபடத்தின் காப்புரிமைCONSUMER AFFAIRS AUTHORITY
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவிக்கின்றது.
எனினும், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்ற உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அமைச்சின் பதில்

கோதுமைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
தேர்தல் காலப் பகுதியில் போலி பிரசாரத்தை மேற்கொண்டு மக்களை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவிக்கின்றார்.
பேக்கரி உற்பத்தி பொருட்கள் மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றை பழைய விலைகளிலேயே கொள்வனவு செய்யுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில் தமது அமைச்சின் உரிய தரப்பிற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.