இராக்கில் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது.
ஏன் போராட்டம்?
போராட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து அரசுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. வேலையின்மை, ஊழல் இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பொதுத் துறை நிறுவனங்களில் தரமான சேவை வழங்க வேண்டும் என்பது போராடும் மக்களின் கோரிக்கை.
இந்த போராட்டத்தின் முதல் அலையானது அக்டோபர் மாதம் தொடங்கியது. ஆறு நாள் நடந்த அந்தப் போராட்டத்தில் 149 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இராக் பிரதமர் அப்துல் மஹ்தி வேலையின்மையைக் குறைக்க உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதுமட்டுமல்லாமல், அதிகம் ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அமைச்சரவையை மாற்றி அமைப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி மீண்டும் அக்டோபர் இறுதியில் போராட்டத்தில் குதித்தனர் போராட்டக்காரர்கள்.
முதலில் சிறிதாக தொடங்கிய இந்த போராட்டம் நாட்கள் செல்ல செல்ல நாடெங்கும் பரவியது.
போராட்டத்தை அடக்க பாதுகாப்புப் படையினர் எதிர்வினையாற்றியதில் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.
இப்படியான சூழலில் கட்சித் தலைமை, பிரதமராக வேறொருவரை அடையாளம் காணுமானால் தனது பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் தற்போதைய பிரதமர் அறிவித்தார்.
இப்போது என்ன நடக்கிறது?
போராட்டம் ஓயவில்லை. மக்கள் தொடர்ந்து வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
நசிரிய நகரத்தில் நடந்த போராட்டத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் குறைந்தது 15 பேர் பலியானார்கள்.
இந்த சூழலில் இராக் பிரதமர் அப்துல் மஹ்தி ராஜிநாமா செய்ய இருப்பதாகப் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசைத் தேர்வு செய்ய வழிவகை செய்யும் வகையில் பிரதமர் தனது ராஜிநாமா கடிதத்தை நாடாளுமன்றத்தில் அளித்துவிட்டதாக அந்த அறிக்கை விவரிக்கிறது.
ராஜிநாமா கடிதத்தை அளித்துவிட்டாலும், எப்போது அவர் பொறுப்புகளிலிருந்து விலகுவார் எனத் தெரியவில்லை. இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறது.
ராஜிநாமா அறிவிப்பு வெளியானதை அடுத்து போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கிக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
- மலேசியத் தமிழ் தொழிலாளர்களை காவு வாங்கும் மலிவு விலை மது
- சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18,000 ஆண்டுகள் முந்தைய விலங்கினம்: நாயா, ஓநாயா?
இரான் மீதான கோபம்
இரான் இராக் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்ற கோபமும் போராட்டக்காரர்களுக்கு உள்ளது.
போராட்டத்தின்போது ’இரானே இராக்கைவிட்டு வெளியேறு’ என்ற கோஷத்தையும் எழுப்பினர். இராக்கில் வேலையில்லா திண்டாட்டத்துக்குக் காரணம் இரான் என அந்த மக்கள் நம்புகின்றனர்.
இராக் நஜாஃப்பில் உள்ள இரான் தூதரகத்தையும் மக்கள் தாக்கினர். நஜாஃப்பில்தான் இறைத்தூதர் நபிகளின் மருமகன் இமாம் அலியின் அடக்க தலம் உள்ளது. ஒரே மாதத்தில் இரான் தூதரகம் தாக்கப்படுவது இது இரண்டாம் முறை.
Post a Comment
Post a Comment