தமிழர்களும், மூஸ்லீம்களும் பேரம் பேசும் சக்தியை இழந்த விட கூடாது




(க.கிஷாந்தன்)
இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் தீர்மானிக்கும் சக்தியாக அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானும், அமரர். அஷ்ரப்பும் திகழ்ந்தார்கள். ஆனால் இன்று நாம் படிப்படியாக அந்த நிலையை இழந்து வருகின்றோம். எனவே எமக்கு பல்வேறு அரசியல் கட்சி இருந்தாலும், கொள்கை ரீதியாக நாம் அணைவரும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டிய காலம் இதுவாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அணைவரும் ஒன்றாக முன்நோக்கி செல்வோம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம் மஸ்கெலியா அக்சயா மண்டபத்தில் 18.10.2019 அன்று நடைபெற்றது.
அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வநாதன் புஸ்பா, மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்களான ராஜ் அசோக், ராஜ்குமார், ஆனந்தன், சுப்பிரமணியம், யோகேந்திரன், ரவீந்திரன், திருமதி. ரஞ்சனி உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை அரசியலில் சிறுபான்மை மக்கள் பேரம் பேசும் சக்தியை படிப்படியாக இழந்து வருகின்றார்கள்.
அது முஸ்லிம்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் ஒரே நிலை தான். இன்று பெரும்பான்மை கட்சிகளின் எண்ணமெல்லாம் அதிகமான பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அதற்காக இனவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இது ஒரு காத்தரமான செயல்பாடு அல்ல. இதனை தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் புரிந்த கொள்ள வேண்டும்.
அன்று அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானும், அமரர். அஷ்ரப்பும் தூர நோக்கு சிந்தனையோடு செயல்பட்டார்கள். இதன் மூலம் பல வெற்றிகளை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இன்று மூஸ்லீம்களும், தமிழர்களும் கட்சி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிந்து நின்று செயல்படுவதை காண முடிகின்றது. இது எமக்கு ஆரோக்கியமான செயல்பாடு அல்ல.
இந்த நாட்டில் நாங்களும் ஏனைய சமூகங்களை போல தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை சமூகம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றியின் பின்பு பாடசலைகளுக்கு சத்துணவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
குறிப்பாக மலையக பகுதிகளில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு செல்கின்றார்கள்.. உரிய சத்துணவுகள் இல்லை. பொருளதார சுமை காரணமாக காலை உணவு இல்லாமலும் அவர்கள் பாடசாலைக்கு செல்கின்றார்கள்.
பசி காரணமாக இடை நடுவில் பாடசாலையை விட்டு வருவதும், முற்றாக பாடசாலைக்கு செல்லாமல் இருப்பதும் நடைமுறையில் நாம் சந்திக்கின்ற பெரிய பிரச்சினையாகும். எனவே இவற்றை தடுக்க வேண்டுமாக இருந்தால் மாணவர்களின் இடை விலகலை குறைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு சத்துணவு வழங்குவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.