சூப்பர் ஓவர் 'பவுண்டரி ரூல்ஸ்' நீக்கம்




கிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த சூப்பர் ஓவர் பவுண்டரி ரூல்ஸ் நீக்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். நடந்த முடிந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர், விறுவிறுப்பிற்கு மட்டுமின்றி, சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் முடிந்தது. குறிப்பாக இறுதிப் போட்டியில் இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டு பவுண்டரிக்கு சென்ற விவகாரம் பேசுபொருளானது. இதற்கும் மேலாக சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அடித்த 15 ரன்களை, நியூசிலாந்து அடித்த போதிலும், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு காரணம் ஐசிசி-யின் கிரிக்கெட் விதிமுறையாகும். இந்த விதிப்படி, ஐசிசி தொடர்களின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சூப்பர் ஓவர்கள் சமனில் முடிந்தால், அதிக பவுண்டரிகளை விளாசிய அணியே வெற்றி பெற்றதாகும். இந்த விதியினால் தான் அன்று இங்கிலாந்து கோப்பை பெற்றது. ரசிகர்களின் மனதை வென்றிருந்தாலும் நியூஸிலாந்து கோப்பையை இழந்தது. இதனால் ரசிகர்கள் முதல் வல்லுநர்கள் வரையிலும் பலரும் இந்த விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை நீக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில துபாயில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சர்ச்சைக்குரிய பவுண்டரி விதிமுறையை ஐசிசி நீக்கியுள்ளது.

இனிமேல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தாலும், ஒரு அணி அதிக ரன்கள் எடுத்து வெற்றி பெரும் வரை போட்டி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; இது முக்கியமான முடிவாக கருதுகிறேன். எப்போது இரண்டு அணிகளும் வெற்றி பெறாத நிலையில் இருக்கிறதோ, அப்போது இது ஒரு நியாயமான முடிவை எட்டுவதற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.