இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை நேற்று சமர்பிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரம ரத்னவினால் நேற்று முற்பகல் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புகொண்டுள்ளதாக காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த அறிக்கை மீது நம்பிக்கை கொள்ள முடியாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
எனினும், அதே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, இந்த அறிக்கை மீதான விவாதமொன்றை கோரியிருந்தார்.
எவ்வாறாயினும், தன்மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது பதிலளித்திருந்த நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை சபையில் சமர்பிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்
இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக 2019ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சமர்பிக்கப்பட்ட பிரேரணை, 2019ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த தெரிவுக்குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டார்.
குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஆசு மாரசிங்க, ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த இடத்திற்கு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டார்.
மேலும், இந்த குழுவின் மேலதிக உறுப்பினராக நளிந்த ஜயதிஸ்ஸ, சபாநாயகரினால் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் முதல் தடவையாக ஊடகங்களுக்கு இதன்போது பகிரங்கப்படுத்தப்பட்டன.
மே மாதம் 23ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள், செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தன.
24 தடவைகள் கூடிய நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், 55 சாட்சிகள் தமது சாட்சியங்களை முன்வைத்திருந்தனர்.
அறிக்கையின் முக்கிய விடயங்கள்
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது 277 பேர் உயிரிழந்ததுடன், 400க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், தாக்குதல் சம்பவத்தில் 40 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 45 சிறுவர்கள் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை நடத்துவதற்கு தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் முன்னாள் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் முன்னின்று செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு சில இன வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. பதற்ற நிலையும் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல் புலனாய்வு சேவை பணிப்பாளருக்கு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் முதலாக கிடைத்துள்ளதென அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், அந்த தகவலை புலனாய்வு மற்றும் பாதுகாப்பு ஆளணியினருடன் பகிர்ந்து கொள்வதில் புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர் தரப்பிற்கு தாமதம் காணப்பட்டமை குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு கண்டறிந்துள்ளது.
ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி காத்தான்குடி பகுதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்திருந்தும், புலனாய்வு சேவை தரப்பினர் செயற்பட தவறியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக (2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி) சஹ்ரான் தொடர்பான ஏனையோர் மேற்கொண்டு வரும் விசாரணைகளை நிறுத்துமாறு போலீஸ் மாஅதிபருக்கு, அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதை அடுத்து, சஹ்ரான் மீதான விசாரணைகளை ஒரே தரப்பினர் மாத்திரம் மேற்கொண்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அதில் கூறப்படுகின்றது.
அரச புலனாய்வுச் சேவையில் ஏற்பட்ட தவறு காரணமாக நூற்றுக்கணக்கான மரணங்கள், அதிகளவிலான காயங்கள், இலங்கை மக்களுக்கு அளவிட முடியாத அளவு இழப்புக்கள் ஏற்பட காரணமாகியதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூறுகிறது.
அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் மாத்திரமன்றி, பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரதானி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவு ஆகியோரும் தமது பொறுப்புக்களை தவறவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் தலைமைத்துவம் வழங்க தவறியுள்ளார் என நாடாளுமன்ற தெரிவுக்குழு குறிப்பிடுகிறது.
இதன்படி, அவசர கூட்டங்களில் இருந்து முக்கிய தனிநபர்களை வெளியேற்றுதல், தேவைக்கேற்ற விதத்தில் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களை நடத்துதல் உட்பட அரசாங்கம் மற்றும் முறைமைகளை மிகவும் கீழ்நிலைப்படுத்தியுள்ளார் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் குழப்ப நிலைமையும் இவ்வாறான நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கண்டி - திகன பகுதியில் 2018 மார்ச் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னர் வன்முறைகளின் ஊடாகவே தமது முடிவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் இளைஞர்களை தீவிரப்படுத்தி ஊக்கமூட்டுவதற்கான ஒரு பிரசாரத்தை சஹ்ரான் ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற தெரிவுக்குழு குறிப்பிடுகின்றது.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கும், ஐ.எஸ். அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்பு இருந்தமை, எந்த சாட்சியங்களின் ஊடாகவும் கண்டறியப்படவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மை ஆண்டுகளில் வஹாபியம் மற்றும் அராபியமயமாக்கல் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேரீச்ச மரங்கள், பொதுப் பெயர்ப் பலகைகளில் அராபிய எழுத்திடல்கள் ஆகியவற்றுடன் காத்தான்குடி நகரின் பௌதீக கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் உள்ளனர் என மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா பத்திரிகை பேட்டியொன்றில் முதல் தடவையாக கூறியுள்ளதாக ஒரு தகவலும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment