கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்ட 39 மனித உடல்கள்




இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இறந்தவர்களில் 38 பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் பதின்ம வயதைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்ப கட்டடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிருடன் யாரேனும் மீட்கப்பட்டுள்ளனரா என்று இது வரை காவல்துறை எதையும் தெரிவிக்கவில்லை.
இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகளுக்கு நீண்ட நேரம் ஆகலாம் என்றும் ஆண்ட்ரூ மரைனர் எனும் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்த வாகனத்தின் ஓட்டுநர் கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதாகும் அந்த நபர் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்தவர்.
பல்கேரியாவில் இருந்து வந்த இந்த வாகனம் ஹோலிஹெட் எனும் இடத்தின் வழியாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததாக எஸ்ஸெக்ஸ் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.40 மணிக்கு ஈஸ்டர்ன் அவென்யூ எனும் இடத்தில் உள்ள வாட்டர் கிலேட் தொழிற் பூங்காவில் இந்த இறந்த உடல்கள் அடங்கிய கண்டைனர் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது அந்த இடம் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அந்த தொழிற் பூங்காவுக்குள் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல ஜூன் 2000ல், சீனக் குடியேறிகள் 58 பேர் மூச்சுத் திணறி இறந்த நிலையில் டோவர் எனும் இடத்தில் கண்டெயினர் லாரி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டனர்.
கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்த வாகனத்தின், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் அடுத்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.