புனித மதினா அருகே விபத்து,35 பேர் உயிரிழப்பு




முஸ்லிம்களின் புனித தலமான, சவுதி அரேபியாவின் மதினா அருகே வெளிநாட்டினர் சென்று கொண்டிருந்த பேருந்து, எக்ஸ்வேட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டினர் 35 பேர் பலியானதாகவும், 4 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கு சவுதி அரேபிய நகரத்திற்கு அருகே, ஒரு தனியார் பயணிகள் பேருந்து மீது கனரக வாகனம் மோதியதால், புதன் கிழமை இந்த விபத்து ஏற்பட்டதாக மதீனா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அரபு மற்றும் ஆசிய நாட்டைச் சேர்ந்த பயணிகள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் அல்-ஹம்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்த விசாரணையை அதிகாரிகள் தொடங்கினர்.
ஜனவரி 2017 -ல், மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு மதீனாவுக்குச் செல்லும் வழியில் இரண்டு மாத குழந்தை உட்பட ஆறு பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் மினி பஸ் விபத்தில் உயிரிழந்தனர். செப்டம்பர் 2015 -ல், ஹஜ் யாத்திரைக்கு வந்து மிக மோசமான பேரழிவில் சிக்கி, நூற்றுக்கணக்கான ஈரானியர்கள் உட்பட – 2,300 வழிபாட்டாளர்கள் இறந்தனர். அந்த மாத தொடக்கத்தில், மக்காவின் கிராண்ட் மசூதியின் முற்றத்தில், கட்டுமான கிரேன் கவிழ்ந்து 100 பேர் கொல்லப்பட்டனர்.