’’காஷ்மீரில் இருந்திருந்தால் நான் துப்பாக்கி ஏந்தியிருப்பேன்’’




''அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு நாங்களும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்தோம். தீவிரவாதத்தால் பாகிஸ்தான் எண்ணற்ற இழப்புக்களை சந்தித்துள்ளது. தீவிரவாதத்தால் 70 ஆயிரத்துக்கும் மேலான உயிர்களை பாகிஸ்தான் இழந்துள்ளது. 150 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் குறிப்பிட்டார். 
நியூயார்க்கில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா மற்றும் நரேந்திர மோதி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்.
''பாகிஸ்தான் பிரதமராக நான் பதவியேற்ற பிறகு இந்தியாவுடன் நல்லுறவு பேண முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் அதற்கு இந்தியாவிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை,'' என்று இம்ரான் கான் தனது உரையில் தெரிவித்தார்.
''ஆப்கானிஸ்தான் மீது சோவியத் படையெடுப்பின் போது நாங்கள் முதல் இழப்பை சந்தித்தோம். ஜிஹாத் மக்கள் இடையே நுழைந்தது. பிறகு ஆப்கானிஸ்தானில் அல்கய்தாவின் வருகைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. அவர்கள் இப்போது எங்களுக்கு எதிரான நிலையில் உள்ளனர்'' என்று அவர் தெரிவித்தார்.
''இந்தியாவில் தேர்தல் நடந்த காலகட்டத்தில், தேர்தலுக்காக மோதி அரசு சில நடவடிக்கைள் எடுத்ததை நாங்கள் புரிந்துகொண்டோம். ஆனால் தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பிறகும், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி நிலவ நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் நரேந்திர மோதி நிராகரித்து விட்டார்,'' என்று இம்ரான் கான் குற்றம் சாட்டினார்.
''காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று இந்த உலகம் கவனிக்க வேண்டும். அங்கு 80 லட்சம் காஷ்மீரிகளை இந்திய அரசு சிறை வைத்துள்ளது.''
இந்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்கி, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது குறித்தும், அதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் குறித்தும் பாகிஸ்தான் பிரதமர் பட்டியலிட்டு பேசினார்.
''நான் இந்த நிலையில் இருப்பதாக கற்பனை செய்து பார்க்கிறேன். 55 நாட்களாக வீட்டுக்குள் அடைக்கப்பட்டு, தினமும் பாலியல் வல்லுறவு மற்றும் கொடுமைகளை பற்றி மட்டுமே கேட்டு கொண்டிருந்தால், நான் எப்படி வாழ நினைப்பேன்?'' என்று இம்ரான் வினவினார்.
''காஷ்மீரில் இருந்திருந்தால் நானே ஒரு துப்பாக்கியை எடுத்திருப்பேன்,'' என அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
''65 நாட்களாக காஷ்மீரில் அமலில் இருந்துவரும் மனிதநேயமற்ற ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டும்.''
காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு பணியில் இருக்கும் படையினர் அங்கிருந்து வெளியே வந்தால் என்ன நடக்கும்? ரத்த ஆறுதான் ஓடும் என்று இம்ரான் கூறினார்.
''5,000 தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பியதாக கூறுகிறார்கள். நாங்கள் ஏன் அனுப்பபோகிறோம். இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி எங்கள் மீது தேவையில்லாமல் பழி போடுகின்றனர்.''
Image captionகோப்புப்படம்
''இந்தியா உலக அளவில் ஒரு மிகப்பெரிய சந்தை என்பதால் அவர்கள் மீது சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவில்லை'' வேண்டும் இம்ரான் தெரிவித்தார்.
''130 கோடி முஸ்லிம்கள் இதனை பார்த்து கொண்டிருக்கின்றனர். நடக்கும் அநீதியை இவர்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு எதிராக, தங்களுக்கு நீதி வேண்டி இவர்களில் சிலர் ஆயுதம் ஏந்தவும் செய்யலாம்,'' என்றார் இம்ரான்.
காஷ்மீரில் இருக்கும் தடைகள் விலக்கப்பட்ட பின் அங்கு ரத்த ஆறுதான் ஓடும்
மீண்டும் புல்வாமா போன்ற தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. நான் அச்சுறுத்தவில்லை; இதனை ஓர் எச்சரிக்கையாகவே கூறுகிறேன். ஓர் ஆணு ஆயுதப் போர் நடக்க வாய்ப்புள்ளது. இதனை தடுப்பது குறித்த கடமை மற்றும் பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளது,'' என்று இம்ரான் கான் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் , தீவிரவாதம் குறித்து பேசினார். மேலும் தனக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்களுக்குள் மோதி தனது உரையை நிறைவு செய்தார். ஆனால் இம்ரான் தனக்கு வழங்கப்பட்ட நேரத்தை தாண்டியே தனது உரையை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.