பிரிட்டிஷ் ஏர்வேஸ்,அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது




லண்டன்:

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட்டுகள் சம்பள பிரச்சினையை முன்வைத்து இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். அதன்படி இன்று விமானங்களை இயக்காமல் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். எனினும் பைலட்டுகள் சமாதானம் அடையவில்லை.

பைலட்டுகளில் பெரும்பாலானோர் போராட்டத்தில் குதித்ததால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.  இதையடுத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், அனைத்து விமானங்களையும் இன்று ரத்து செய்துள்ளது.

பல மாதங்களாக சம்பள பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டதாகவும், தற்போது போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்பட்டமைக்கு வருந்துவதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

“பைலட்டுகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் தயாராக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஸ்டிரைக்கில் ஈடுபடும் பைலட்டுகள் விவரம் குறித்து பைலட்டுகள் சங்கத்திடம் இருந்து எந்த  தகவலும் வரவில்லை.



எத்தனை பேர் வேலைக்கு வருவார்கள்? எந்த விமானத்தை இயக்கும் அளவுக்கு அவர்கள் பயிற்சி பெற்றவர்கள்? என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வேறு வழியின்றி 100 சதவீத விமானங்களையும் ரத்து செய்துள்ளோம்” என பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.