(க.கிஷாந்தன்)
எதிர்வரும் காலங்களில் கல்வி அமைச்சு இலங்கையில் பல மாவட்டங்களிலும் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் மத்திய மாகாண கல்வி அமைச்சு, நுவரெலியா மாவட்ட வலய கல்வி பணிமனைகள் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் இந்த மாவட்டத்தில் இன்னும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான வேலைத்திட்டம் என்னிடம் இருக்கின்றது.அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் அதனை செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
அதேநேரத்தில் இன்று மலையகத்தில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் வழங்குகின்ற ஒத்துழைப்புக்கும் மலையக மக்கள் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் 09.09.2019 அன்று மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இதற்காக 170 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 09.09.2019 அன்று தேசிய மட்டத்தில் 25 மாவட்டங்களில் 500 பாடசாலைகள் இவ்வாறு திறந்து வைக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
கல்லூரி அதிபர் எஸ்.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.
அவரோடு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், முன்னாள் இ.தொ.கா மற்றும் தொ.தே.சங்க மாகாண சபை உறுப்பினர்கள், அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் பாலச்சந்திரன், மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் ,கல்வியமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைக்கான அபிவிருத்தி பணிப்பாளர் சு.முரளிதரன், வலய கல்வி பணிப்பாளர் கல்வி அதிகாரிகள், பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இங்கு உரையாற்றிய அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்.
மலையக வரலாற்றில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளைவிட இந்த நல்லாட்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி அதிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
குறிப்பாக மலையக பாடசாலைகளில் பாரிய அபிவிருத்திகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படுவது வரவேற்புக்குரியது நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் மலையகத்தின் பாரிய அபிவிருத்திகளை செய்வதற்கு எனக்கு முழுமையான
ஒத்துழைப்பு வழங்கிய அகில விராஜ் காரியவசம் பிரதமர் ஆகிய இருவருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.
எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிகமான அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு ஆகும்
கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கு நான் எடுத்த முயற்சிக்கு மத்திய மாகாண கல்வி அமைச்சும், அங்கிருந்த முதலமைச்சரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இன்று மலையகம் கல்வியில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றது. அதற்கு காரணம் பல பாடசாலைகளுக்கும் வளங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. அதேநேரத்தில் ஒரு சில பாடசாலைகள் குறைவான வசதிகளோடு செயல்படுவதையும் காணமுடிகின்றது.
எதிர்காலத்தில் அந்த பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நான் வேலைத்திட்டங்களை முன்வைக்கவுள்ளேன். கடந்த காலங்களில் மலையகம் உட்பட 25 பாடசாலைகள் கணித, விஞ்ஞான பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டு அவற்றிருக்கு தேவையான வளங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் கணித, விஞ்ஞான ஆசிரியர்களின் தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன். இந்த வளங்களை முறையாக பயன்படுத்தி அதற்கான முழு பலன்களையும் பெற்றுக்கொள்வதற்கு அதிபர்களும், ஆசிரியர்களும் தங்களை அர்ப்பணித்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
என்னை பொருத்தவரையில் மலையகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய செய்ய வேண்டுமாக இருந்தால் அதற்கு கல்வி மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
எனவே நாம் அணைவரும் மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும். தனி ஒருவனால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. எனவே உங்கள் அணைவருடைய ஒத்துழைப்பு தொடர்ந்து எனக்கு கிடைக்குமாக இருந்தால் இன்னும் பல அபிவிருத்திகளை மலையகத்தில் முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment