(க.கிஷாந்தன்)
சம்பள முரன்பாட்டினை தீர்க்க கோரி நாடாளவிய ரீதியில் ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு தன்னெழுச்சி இளைஞர் அமைப்பு ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் கணேசன் உதயகுமார் தெரிவித்தார்.
அட்டனில் 26.09.2019 அன்று தன்னெழுச்சி இளைஞர் அமைப்பும், தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உதவி ஆசிரியர்களின் நியமனங்கள் இழுத்தடிப்பாகவே காணப்படுகின்றது. வெகுவிரைவில் இவர்களுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையும் 7வது கோரிக்கையாக ஆசிரிய சங்கங்கள் முன்வைக்க வேண்டும்.
அத்தோடு, நுவரெலியா கல்வி காரியாலயத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் மொழி புறக்கணிப்பு காரணமாக பாடசாலைகளுக்கு தமிழில் கடிதங்கள், ஆவணங்கள், சுற்றறிக்கைகள் போன்றன வருவது தவிர்க்கப்பட்டு வருகின்றது.
சிங்கள மொழி மூலம் ஆவணங்கள், கடிதங்கள் வருவதனால் பாடசாலையின் ஆசிரியர்களும், அதிபர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனையும் சீர்ப்படுத்த வேண்டும். இதனை நாங்கள் மொழி தொடர்பிலான அமைச்சர் மனோ கணேசனின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, வெகுவிரைவில் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
Post a Comment
Post a Comment