ஊவா மாகாண டிப்ளோமா தாரிகளின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக தீர்வு காணப்படும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சின் செயலாளர் ரணசிங்க ஆகியோருடன் இன்று பிற்பகல் கலந்துரையாடிய போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மேன்முறையீட்டு குழு தற்போது உக்கிரமடைந்துள்ள இந்த பிரச்சினையை தீர்க்க விரைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெறுமனே பதுளை மாவட்டத்தில் மாத்திரம் இந்த பிரச்சினை காணப்படவில்லை எனவும் ஏனைய பகுதிகளிலும் இந்த பிரச்சினை எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த குழுவினர் நாளையும், நாளை மறுதினமும் கூடி ஆராய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவற்றை கருத்திற்கொண்டு இன்றைய தினத்திற்குள் கல்வியமைச்சின் தீர்மானங்களை ஊவா தமிழ் கல்வி அமைச்சு உள்ளிட்ட ஏனைய மாகாண கல்வி அமைச்சுக்களுக்கும் எழுத்து மூலம் அறிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கான உத்தரவாதத்தை கல்வி அமைச்சரும், அதன் செயலளரும் தனக்கு வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளி மாவட்டங்களில் நியமனம் பெற்றுள்ள ஊவா மாகாண டிப்ளோமா தாரிகளை அவர்களது சொந்த மாகாணங்களிலேயே பணியில் அமர்த்துமாறு அண்மையில் மத்திய கல்வி அமைச்சரிடம் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனடிப்படையில் அவரின் கோரிக்கையை பரிசீலிப்பதற்காக மத்திய கல்வி அமைச்சில் தற்போது மேன்முறையீட்டு குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
எனவே, அந்த மேன்முறையிட்டு குழுவின் இறுதி முடிவு வெளியாகும் வரையில் ஊவா மாகாண டிப்ளோமா தாரிகள் பிறமாவட்ட பாடசாலைகளுக்கு சமூகம் அளிக்கும் கால எல்லை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளமை நினைவு கூறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment