ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினையை பிரதமர் ரணில் நல்ல முறையில் தீர்த்து வைப்பார்




(க.கிஷாந்தன்)
ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிக சூட்சகமாக நல்ல முறையில் தீர்த்து வைப்பார் என நான் எதிர்பார்க்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி.வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மஸ்கெலியா ரதபோட் தோட்டத்தில் உள்ள மக்கள் சுமார் 30 வருட காலமாக கம்பி பாலத்தின் ஊடாக தங்களது பயணங்களை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் மேற்கொண்டு வந்துள்ளனர்.
குறித்த கம்பி பாலம் உடைந்த நிலையில் போக்குவரத்துக்கு உதவாத நிலையில் காணப்பட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் அமைச்சர் இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து அமைச்சர் அவர்கள் உடனடியாக இப்பகுதிக்கு பாலம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தார். இதற் முதற்கட்டமாக 23.09.2019 அன்று மாலை அடிக்கல் நாட்டி வைத்தார். அமைச்சின் 42 மில்லியன் ரூபா செலவில் இப்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வின் போது அமைச்சர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தென்கிழக்கு ஆசியாவிலேயே முதிர்ச்சி பெற்ற ஒரு அரசியல்வாதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அவர் எப்பொழுதுமே ஐக்கிய தேசிய கட்சிக்கும், மக்களுக்கும் நல்ல விடயங்களையே மேற்கொள்வார். அதேபோன்று இந்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் நல்ல முடிவு ஒன்றை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.