பாகிஸ்தான் எல்லையில் பலத்த நிலநடுக்கம்




#இஸ்லாமாபாத்:
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தானில் மிர்பூர் நகரத்தை மையம் கொண்டு மாலை 4.30 மணி அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத், பெஷாவர், டிராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜ்ரத், சித்ரல், மலாகண்ட், ,முல்தான் உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீ.ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததால் பல சாலைகள் இரண்டாக பிளந்து சேதமாகின.

இரண்டாக பிளந்த சாலைகளின் நடுவில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் நகரங்களில் பல கட்டிடங்கள் சேதமாகின. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பாக். அரசு முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் நாடாளுமன்றம் அமைந்துள்ள இடம், பத்திரிக்கையாளர் மன்றம் அருகேயும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மக்கள் அச்சத்தில் வெளியேறினர்.