(க.கிஷாந்தன்)
2019 ஆம் ஆண்டிற்கான கலைஞர்களுக்கான அரச விருது வழங்கல் விழா இம் மாதம் இரண்டாம் திகதி கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெற்றது.
இதன்போது நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைய 5,000 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்ததாக அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு மற்றும் அதன் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தனர். அதற்கமைய விண்ணப்பங்களில் இருந்து 224 பேரை தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவம் அண்மையில் வழங்கப்பட்டது.
இருப்பினும் குறித்த கலைஞர்களுக்கான அரச விருது வழங்கல் விழாவில் நுவரெலியா மாவட்ட கலைஞர்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்பதை அண்மைக்காலமாக ஊடகங்களில் தெரிவித்து வந்த நிலையில் அது தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றினை 08.09.2019 அன்று அட்டன் நகரில் உள்ள விருந்தகம் ஒன்றில் நுவரெலியா மாவட்ட இசைக்கலைஞர்களின் அபிவிருத்தி ஒன்றியமும், தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்தின.
இதன்போது குறித்த அமைப்புகளின் நிர்வாகிகள் ஊடகங்களுக்கு தமது அதிருப்தியை வெளியிட்டனர். இறுதியில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட நுவரெலியா மாவட்ட இசைக்கலைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தின் நிர்வாகிகளினால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கும் வகையிலான மகஜர் ஒன்றினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் இடம் கையளித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு இசை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பலரும் தமது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். கொழும்பு நகரிலும், வடகிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் மக்களையும் மட்டும் வைத்துக்கொண்டு குறித்த நிகழ்வு நடைபெற்றதாகவும், மலையகத்தில் உள்ள கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக இதிலிருந்து புறக்கணிக்கபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக தகவல்களை திரட்டி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைப்புக்களில் தலைமை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment