நொச்சிமுனை பகுதி உல்லாச விடுதி உரிமையாளர் மீது தாக்குதல்




மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி நொச்சிமுனை பகுதியிலுள்ள உல்லாச விடுதியொன்றில் குழுவினர் உட்புகுந்து முகாமையாளர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டதில் முகாமையாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(20)ந் திகதி மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த உல்லாச விடுதியில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரின் செயற்பாடு காரணமாக அவரை கடந்த வாரம் கடமையில் இருந்து நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த ஊழியர் முகாமையாளரை கொலை செய்வதாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து முகாமையாளர் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் நிலையத்துக்கு சென்ற போது பொலிசார் ஒரு மணித்தியாலயத்தின் பின் வருமாறு தெரிவித்தனர்.

இதனை அடுத்து முகாமையாளர் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த ஊழியர் சுமார் 8 பேருக்கு மேற்பட்ட இளைஞர்களுடன் கத்தி மற்றும் இரும்புகம்பி சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களுடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சம்பவ தினமான நேற்று மதியம் 11 மணியளவில் குறித்த ஹோட்டலுக்குள் உள்நுழைந்து முகாமையாளரை கத்தியால் குத்தியதில் முகாமையாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.