அறுகம்பேயில் ஆரம்பமானது,உலக கடலலைச் சறுக்கல்




ஆண்களுக்கான உலக கடலலைச் சறுக்கல் (சர்ஃபிங்) போட்டிக்கான தகுதிச் சுற்று (World Surf League Qualifying Series QSL3000) இலங்கையின் அறுகம்பே பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமானது.
இம்மாதம் 29ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டித் தொடரில் 25 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இலங்கை பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய ஒலிம்பிக் குழுவும் இணைந்து நடத்தும் உலக கடலலைச் சறுக்கல் (சர்ஃபிங்) போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று அனுசரணையினை இலங்கை சுற்றுலா மேம்படுத்தல் அதிகார சபை வழங்குகிறது.
உலக கடலலைச் சறுக்கல் போட்டி, அறுகம்பேயில் ஆரம்பம்
ஆஸ்திரேலியா, இந்தோனீஷியா, பிரான்ஸ், வெனிசுவேலா, இஸ்ரேல், அமெரிக்கா, போர்ச்சுகல், நியூசிலாந்து, மெக்ஸிகோ, ஸ்பெயின், பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, கோஸ்டாரிகா, அர்ஜெண்டினா, ஜப்பான், அயர்லாந்து, சிலி, பெல்ஜியம், பெரு, இந்தியா, மாலத்தீவு, மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் இந்த போட்டித் தொடரில் பங்கேற்கின்றனர்.
இலங்கையைச் சேர்ந்த 22 போட்டியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
உலக கடலலைச் சறுக்கல் போட்டி, அறுகம்பேயில் ஆரம்பம்
நேற்றைய ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட 'அறுகம்பே சர்ஃப் க்ளப்' முகாமையாளரும், போட்டியாளர்களில் ஒருவருமான ஜோன்ஸன் ரட்னசிங்கம் பிபிசியிடம் பேசுகையில், இலங்கை வீரர்களில் மிகத் திறமையான பலர் உள்ளமையினால், இம்முறை முதலிடத்தை இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக் கொள்வார் எனும் நம்பிக்கை தனக்கு உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தப் போட்டித் தொடரில் பங்குகொள்ளும் போட்டியாளர்களில் பலர், உலக அளவில் சர்ஃபிங் விளையாட்டில் பிரசித்தி பெற்றவர்களாவர். மேலும், அடுத்து வருடம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கள் நாடு சார்பாக சர்ஃபிங் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளவர்களும், அறுகம்பேயில் நடைபெறும் போட்டித் தொடரில் கலந்து கொள்கின்றனர்.
உலக கடலலைச் சறுக்கல் போட்டி, அறுகம்பேயில் ஆரம்பம்
2020ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், சர்ஃபிங் விளையாட்டு, முதல் முறையாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்கதக்து.
இந்தப் போட்டித் தொடரில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கடலலைச் சறுக்கல் சாம்பியன் மார்க் ஒச்சிலுபோ (Mark Occhilupo), விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொள்கிறார்.
உலக கடலலைச் சறுக்கல் போட்டி, அறுகம்பேயில் ஆரம்பம்
அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்க, இலங்கை சுற்றுலா மேம்படுத்தல் அதிகார சபையின் தலைவர் கிஷு கோமஸ் ஆகியோர், மேற்படி போட்டித் தொடரை நேற்று கோலாகலமாகத் தொடக்கிவைத்தனர்.
இந்தப் போட்டித் தொடர் நடைபெறும் அறுகம்பே பகுதி, கடலலைச் சறுக்கல் (சர்ஃபிங்) விளையாடுவதற்கு உலகளவில் சிறந்த இடங்களில் ஒன்றாகும்.