கச்சா எண்ணெய் விலை உயருமா?




செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரான் ஆதரவு பெற்ற, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தினமும் 5.7மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என செளதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
இது செளதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்.

செளதி

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ இரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது ஏமனில் இருந்து நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செளதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவப் படை ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவளிக்கிறது.
"முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக ஆற்றல் விநியோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது," என பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

பாம்பேயோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்கா அதன் கூட்டணி நாடுகளுடன் செயல்பட்டு உலக ஆற்றல் விநியோகம் தடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் எனவும், இந்த தாக்குதலுக்கு இரான் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார் பாம்பேயோ.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை நான்கு மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
தற்போது நிலை கட்டுக்குள் வந்துவிட்டதாக அரம்கோவின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இரானின் அணுஆயுத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றை டிரம்ப் நிராகரித்து அந்நாட்டின் மீதான தடையை நீடித்ததால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பெரட்டில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொலைக்காட்சியான யாயா சரியாவில் பேசிய ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர், "எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்," என்று தெரிவித்தார்.
மேலும், செளதி அரேபியாவுக்குள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், "செளதி அரசாங்கத்தில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதலை தடுக்கவும், எதிர்கொள்ளவும் செளதி அரசு தயாராக உள்ளதாக அந்நாட்டின் முடியரசர் முகமத் பின் சல்மான் டிரம்பிடம் தொலைப்பேசியில் பேசியதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான செளதி ப்ரெஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
`உலகின் எண்ணெய் ஆதாரம்`
அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது.

யேமன்

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 1% கிடைக்கிறது.
செளதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே இந்த தாக்குதலால் திங்களன்று எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2006இல் அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அல்-கய்தா நடத்தத் திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலை சௌதி காவல் படைகள் முறியடித்திருந்தன.
சௌதி விமானப் படை மற்றும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை சமீப ஆண்டுகளாக ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

யார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?


ஏமன் போர்படத்தின் காப்புரிமைEPA

இரான் அரசின் ஆதரவுப் பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அரசுக்கும், செளதி தலைமையிலான கூட்டுப்படைக்கும் எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர்.
ஏமன் அதிபர் அப்த்ராபா மன்சூர் ஹதி ஹூதி கிளர்ச்சியாளர்களால் தலைநகர் சனாவுக்கு தப்பிச் செல்ல நேர்ந்த 2015ஆம் ஆண்டிலிருந்து அங்குப் போர் நடைபெற்று வருகிறது.
செளதி அரசு ஏமன் அதிபருக்கு ஆதரவளிக்கிறது. மேலும் அந்த பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து கூட்டணிப் படைக்குத் தலைமை ஏற்று ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.