இந்நிலையில், அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) மாணவர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது பள்ளியின் விடுதி மற்றும் பிற இடங்களில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்த மாணவர்கள் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கியுள்ளனர். அந்தப் பள்ளியில் அவசரக்கால வெளியேறும் வழி இல்லாததாலும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு முன்னாலும் இரும்புக் கம்பிகள் வைக்கப்பட்டிருந்ததாலும் வேறு எங்கும் நகர முடியாமல் தவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 26 குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். பிற குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களைத் தூக்க முடியாமல் சாக்குப் பைகளில் கட்டி வெளியில் கொண்டுவந்துள்ளனர் மீட்புப்படையினர்.
சம்பவம் நடந்த பள்ளிக்கு வெளியில் மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் கதறி அழும் காட்சிகள் பார்ப்பவர்களைக் கலங்கவைத்தது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் வேஹ் (George Weah).
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``26 குழந்தைகளின் உயிரிழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. அதனால் உடனடியாக இங்கு வர வேண்டும் என முடிவு செய்து வந்துள்ளேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் என் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
உயிரிழந்த மாணவர்களில் பலர் 10 வயதுக்குக் குறைவானவர்கள். அவர்களின் உடல்களுக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. சம்பவத்தை நேரில் பார்த்தவர் இது பற்றிப் பேசியதாவது, ``நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென அலறல் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அப்போது பள்ளி முழுவதும் சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. மீண்டும் உற்றுப்பார்த்தபோதுதான் நெருப்பு எரிவது தெரிந்தது. பின்னர் உடனடியாகத் தீயணைப்பு வாகனத்துக்கு போன் செய்தேன். பள்ளியிலிருந்து வெளியில் வர, ஒரு வழி மட்டுமே உள்ளது, அது மிகவும் குறுகலானது” என வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Post a Comment
Post a Comment