நீர்கொழும்பில் பேராயர் களத்துக்குச் சென்றதையடுத்து இயல்பு நிலை




நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கல்லெறிந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பிரதேசத்தில் பொதுமக்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலையிலிருந்து முன்னெடுத்தனர்.
இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. அங்கு பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.
அதேவேளை, குறித்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாக உடனடியாக மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் அங்கு விரைந்த பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேசினார்.
அமைதியாகச் செயற்பட வேண்டும் எனவும், இது குறித்து உயர்மட்டத்தினரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் எனப் பேராயர் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.