ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் அம்மாநிலத்தின் இரு முன்னாள் முதலமைச்சர்களும் அடங்குவர்.
இந்நிலையில், ஜம்மு நகரில் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர் உறுதி செய்கிறார்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை ஸ்ரீநகரில் உள்ள செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் உறுதிபடுத்தினார்.
ஒமர் அப்துல்லா ட்வீட்
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30க்கு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டார். "இன்று நள்ளிரவு முதல் நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். பிற மையநீரோட்டத் தலைவர்களுக்கு இதற்கான நடைமுறை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது உண்மையா என்று அறிந்துகொள்வதற்கு எந்த வழியும் இல்லை. ஆனால், இது உண்மையாக இருந்தால், உங்கள் அனைவரையும், என்ன நடக்க இருக்கிறதோ அதன் மறுபுறத்தில் இருந்து பார்ப்பேன். அல்லா எம்மை காக்கட்டும்" என்று அந்த ட்வீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும்வரை இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்படும். ஸ்ரீநகர் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வீட்டுக்காவலில் உள்ளதலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட பின்னர் ட்வீட் செய்த ஒமர் அப்துல்லா, "காஷ்மீரில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், அல்லாவின் அருளால் நல்லதே நடக்கும் என்று நான் வலிமையான நம்புகிறேன். அனைவரும் அமைதி காக்கவும், பாதுகாப்புடன் இருக்கவும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இரண்டாவதாக பின்னர் ட்வீட் செய்த அவர், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நன்மை பற்றி கவலைப்படாதவர்கள்தான், இங்கு வன்முறை செய்வார்கள். ஆனால் நான் நம்பிக்கையை இழக்கத் தயாராக இல்லை" என்றும் கூறியுள்ளார்.
மேலும் பிர் பஞ்சல் மற்றும் செனாப் பள்ளத்தாக்கில் வாழும் மக்களை நினைத்தால் கவலையாக உள்ளது என்றும் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தப் பகுதிகள் வகுப்புவாத வன்முறை முயற்சிகளால் எளிதாக பாதிக்கப்படலாம். அரசாங்கம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள மெஹபூபா முஃப்தி, "காஷ்மீரில் அமைதிக்காக போராடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் வீட்டுச்சிறையில் இருப்பதை பார்க்கும்போது எவ்வளவு முரணாக உள்ளது. மக்களும் அவர்களின் குரல்களுக்கும் இங்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதை இந்த உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவை தேர்ந்தெடுத்த காஷ்மீரில் நிலவும் இந்த அடக்குமுறை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.
காஷ்மீரின் இந்த நிலையை கொண்டாட்டத்துடன் பார்ப்பவர்களுக்கு இதன் விளைவுகள் தெரியவில்லை என்றும் மெஹ்பூபா கூறியுள்ளார்.
மேலும் வாஜ்பேயி பாஜக தலைவராக இருந்தபோதிலும், "காஷ்மீர் மக்களைப் புரிந்துகொண்டு அவர்களின் அன்பை பெற்றார். இன்று அவர் இல்லாததை நாங்கள் அதிகம் உணர்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரில் என்ன நடக்கிறது?
- இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது 10,000 துணை ராணுவப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்படுவதாக ஜூலை 26 அன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சக ஆணையின் நகல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இது அச்சத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கியது. ஆனால், இது வழக்கமான நடைமுறை என்றும் அச்சமடையத் தேவையில்லை என்றும் கூறியது மத்தியில் ஆளும் பாஜக அரசு.
- ஜம்மு - காஷ்மீரில் ஏற்கனவே 10,000 கூடுதல் காவல் படையினர் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 25,000 படையினரை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, இந்திய அரசால் உத்தரவிடப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து போன்றவற்றில் மிகப்பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படலாம் என்ற அச்சம் அங்கு நிலவிய சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பின் 35-ஏ பிரிவு மற்றும் 370 வது பிரிவை ரத்து செய்ய பா.ஜ.க அரசு முயல்வதாக தகவல்கள் பரவின.
- அமர்நாத் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டும் அமர்நாத் பயணிகள் உடனடியாக பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை கேட்டுக்கொண்டது.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க பா.ஜ.க அரசு முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கை அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்தித்தார்.
- பதற்றம் அதிகரித்த நிலையில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சேகரிக்க தொடங்கினர்.
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ எந்த அறிவிப்புகளும் அறிவிக்கப்படப் போவது கிடையாது என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment