இந்திய கிரிக்கெட் அணியை கேலி செய்து பாகிஸ்தான் வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரம்




இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். ஆனால் இப்போது ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தால் இரண்டு நாடுகளுக்கு இடையே மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை கிரிக்கெட் போட்டியை இது மையமாக கொண்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தானின் ஒரு தொலைக்காட்சி, விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தால் வரும் ஞாயிறு அன்று நடைபெறவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமாக மாறியுள்ளது.
இந்த விளம்பரத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானிடம் சிக்கி பின்பு விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமானை போல மீசை வைத்த ஒருவர், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை அணிந்து கொண்டு வருகிறார். அவர் கோப்பையில் தேநீர் அருந்தி கொண்டிருப்பது போல காட்டப்படுகிறார். அவரிடம் `இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்யும்? யார் யார் விளையாடுவார்கள்?' என்று கேள்விகளை கேட்கின்றனர். அதற்கு அவர் என்னால் கூற முடியாது என்று மறுக்கிறார். பின்பு அவர் எழுந்து செல்லும் போது "கப்பை " வைத்து விட்டு செல்லுங்கள் என்று கூறுகின்றனர்.
Pakistan ad 'mocking' Indiaபடத்தின் காப்புரிமைPAKISTAN INFORMATION MINISTRY (ISPR)
இந்த வீடியோ அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கியபோது அவரை விசாரணை செய்த வீடியோவை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.
அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டப் பிறகு அவர் இந்தியாவில் ஒரு ஹீரோவாக மதிக்கப்பட்டார்.
இதனால் இந்த விளம்பரத்திற்கு சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் பலர் கண்டனம் தெரிவித்து ட்வீட் பதிவு செய்துள்ளனர்.
இந்தியா ஜூன் 16 ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள டிராஃபோர்ட் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இதுவரை உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி ஒரு முறை கூட வீழ்த்தியது இல்லை. இந்த விளம்பர சர்ச்சையால் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி ரசிகர்களின் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.