‘ஜிகாத்’ என்று கூறியதற்காக ஒருவரை பயங்கரவாதியாக சித்தரிக்க முடியாது"




#India.
மகாராஷ்டிரத்தில் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, அந்த பிரச்சினையில் அகோலாவை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 24), சோயீப் கான் (24), சலீம் மாலிக் (26) ஆகியோர் பணியில் இருந்த போலீசாரை தாக்கியதாக கூறப்பட்டது. இதில் அப்துல் ரசாக் 2 போலீசாரை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது.

இதில் போலீசாரை தாக்கிய குற்றத்துக்காக அப்துல் ரசாக்கிற்கு கோர்ட்டு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

மேலும் கைதான 3 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் மற்றும் பாம்பே போலீஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கடுமையான சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி அவர்கள் அகோலா சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று நீதிபதி ஏ.எஸ்.ஜாதவ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கைதான 3 பேரும் முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்க சதி செய்ததாக பயங்கரவாத தடுப்பு படை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாட்டு இறைச்சி தடையை தொடர்ந்து, அப்துல் ரசாக் அரசுக்கு எதிராகவும், சில இந்து அமைப்புகளுக்கு எதிராகவும் வன்முறையில் ஈடுபட்டு கோபத்தை வெளிப்படுத்தியதாகவும், அவர் ‘ஜிகாத்’ என்று கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஏ.எஸ்.ஜாதவ் கூறியதாவது:-

குற்றம்சாட்டப்பட்ட அப்துல் ரசாக் ‘ஜிகாத்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியாக போலீசார் தெரிவித்து உள்ளனர். ஜிகாத் என்றால், அரபு மொழியில் போராட்டம் என்று தான் அர்த்தம். எனவே ஒருவர் ஜிகாத் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக மட்டும், அவரை பயங்கரவாதியாக சித்தரித்து விட முடியாது.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.