மாகாண சபைச் தேர்தல் தாமதம்: பிரதான காரணர் பிரதமர் ரணிலே! –




“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாகத் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். நேற்றும் இது குறித்து அவர் வலியுறுத்தி இருக்கின்றார். எனினும், ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் மதில்மேல் பூணையாகவே செயற்படுகின்றனர். இதன் பிரதான காரணராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார் என்பதுவே உண்மை.”
– இவ்வாறு தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.
இவ்விடயம் குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நாடாளுமன்றத்தில் ஒரேயொரு பிரோரணையைக் கொண்டு வருவதன் மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை இரண்டு வார காலத்தில் நடத்த முடியும். இதனைச் செய்வதற்கு பிரதமருக்கு நேரகாலம் இல்லாமல் இருக்கின்றது. பழைய முறைமையின் கீழ் (விகிசாரத் தேர்தல்) இந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே நாட்டிலுள்ள கட்சிகள் பலவற்றினதும் விருப்பாகவும் – முடிவாகவும் இருக்கின்றது.
இந்த விருப்பத்தை பிரதான எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பங்களிக் கட்சிகளின் தலைமைகளும் ஜே.வி.பியினரும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றனர். இவற்றை ஏற்றுக்கொண்டு துரிதமாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி முடிக்கலாம். எனினும், ஏதோவொரு காரணம் கூறப்பட்டு இவ்விடயம் காலதாமதப்படுத்தப்படுகின்றது.
அண்மைய அமைச்சரவை கூட்டங்களில் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டபோதும் தாமதப்படுத்தலுக்கான அம்சங்களே அங்கு முன்வைக்கப்பட்டு வந்தன. இவ்விடயம் குறித்து பொது அமைப்புகள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது. எனினும், அரச தரப்பு இவ்விடயத்தில் துரிதமான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை துளியும் ஏற்படவில்லை.
தத்தமது கட்சிகளுக்குள்ள வெற்றி வாய்ப்புச் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டே பிரதான கட்சிகளும் அதன் தலைமைகளும் செயற்படுகின்றன. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி இந்த நிலைபாட்டில்தான் செயற்படுகின்றது.
மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் தோற்றத்தின் வெளிப்பாடாகவே இந்தக் காலம் தாழ்த்தும் நடவடிக்கைகள் இருக்கின்றன. எனவே, இந்த விடயத்தில் நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாகச் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் இந்த விடயத்தில் ஓரணியாக இணைந்து செயற்பட முன்வரவேண்டும்” – என்றுள்ளது.