தங்கொட்டுவ சந்தையில் அனைத்து இனத்தவர்களுக்கும் வர்த்தகம் செய்ய அனுமதிக்கவும்




தங்கொட்டுவ வாராந்த சந்தையில் அனைத்து இனத்தவர்களுக்கும் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்குமாறு வென்னப்புவ பிரதேச சபை தவிசாளருக்கு மாரவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட தடைவிதிப்பதாக வென்னப்புவ பிரதேச சபை தவிசாளர் தெரிவித்திருந்தார். 

அதன்படி தங்கொட்டுவ பொலிஸாரிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மாரவில நீதிமன்றத்தில் கடந்த 25ம் திகதி விளக்கமளித்தனர். 

இதனையடுத்து வென்னப்புவ பிரதேச சபை தவிசாளர் கே.வி சுசந்த உட்பட 6 பேரை இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜராகி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணத்தை விளக்கப்படுத்துமாறு அழைப்பானை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் குறித்த மனு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது வென்னப்புவ பிரதேச சபை தவிசாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.