மாலைதீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு




மாலே:

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்கு வந்துள்ளார்.

அவரை மாலே விமான நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரித்து, முப்படையினரின் அணிவகுப்புடன் மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் வரவேற்று அழைத்துச் சென்றார்.
இன்றும் நாளையும் மாலத் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து அந்நாட்டு அதிபர் இப்ராகீம் சோலியுடன் ஆலோசனை நடத்துகிறார். அதை தொடர்ந்து மாலத்தீவு பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
அவரது இந்த பயணத்தின்போது இந்தியா- மாலத்தீவு இடையே 14 ஒப்பந்தங்கள் கையொப்பமாகிறது. மாலத்தீவில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு படகு போக்குவரத்து, மாலத்தீவில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டித் தருவது உள்ளிட்ட திட்டங்கள் இதில் இடம்பெறுகின்றன.

மேலும் மாலத்தீவில் கடலோர கண்காணிப்பு ரேடார் திட்டத்தையும், ராணுவ பயிற்சி மையத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார்.
விமான நிலைய வரவேற்பையடுத்து மாலி நகரில் உள்ள குடியரசு சதுக்கத்தில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா முஹம்மது சோலிஹ் மற்றும் பிரதமர் மோடி முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.