மோர்கனின் சிக்ஸர் மழையால் இங்கிலாந்து பெரும் வெற்றி




2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இதில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையே மான்செஸ்டர் நகரில் நடந்த போட்டியில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தார்.
கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற ஜேசன் ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.
இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதும் கைகொடுத்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்தார்.
மோர்கனின் சிக்ஸர் மழையால் இங்கிலாந்து பெரும் வெற்றி: இந்தியாவுக்கு சவாலா?படத்தின் காப்புரிமைALLSPORT/GETTY IMAGES
ஆனால், இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் சிகரமாக அமைந்தது அந்த அணியின் தலைவர் இயான் மார்கனின் அதிரடி ஆட்டம்தான்.
71 பந்துகளில், 17 சிக்ஸர்கள் விளாசி, அவர் எடுத்த 148 ரன்கள் பெரிதும் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது.
398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை.
ஹஸ்மத்துல்லா அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். ஆனால், அந்த அணியின் பல வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் மட்டும் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் வென்றார்.
நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து நான்கு போட்டிகளில் வென்றுள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
மிகவும் வலுவான பேட்டிங், உள்ளூர் சூழலுக்கு ஏற்ற திறன்வாய்ந்த பந்துவீச்சு என மிகவும் நன்றாக விளையாடிவரும் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதேபோல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை சிறப்பாக வென்று நல்ல நிலையில் உள்ள இந்திய அணியும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது.
இதனால் வரும் 30-ஆம் தேதியன்று நடக்கவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டி மிகவும் பரபரப்பான போட்டியாகவும், இந்தியாவுக்கு சவால்மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.