முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கிவிடாதீர்கள்!




வடக்கில் ஒரு பிரபாகரன் உருவானது போல் முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கவேண்டாம். அண்மைய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்திலானதுதான். அதை அடையச் செய்ய இடமளிக்க வேண்டாம். இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ முல்லைத்தீவு மாவட்ட செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு முல்லைத்தீவு பிரதேச சபை விளையாட்டரங்கில் இன்று (08) முற்பகல் நடைபெற்றகலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கு 80 வீதமான முல்லைத்தீவு மக்கள் எனக்கு வாக்களித்தனர். நாட்டை ஆண்ட ஆறு ஜனாதிபதிமாரில் நான்தான் கூடுதலாக முல்லைத்தீவு வந்துள்ளேன்.
முல்லைத்தீவில் வறுமை நிலைமை உள்ளது. அதனை இல்லாமலாக்க நாம் செயற்படவேண்டும். இன, மத, குல பேதங்களால் பிரிந்துள்ள நாம் நாட்டை மேம்படுத்த ஒன்றுபட வேண்டும்.
போரில் பலரின் காணி உறுதிகள் அழிந்துள்ளதாக அறிந்தேன். இதனால் வங்கிக் கடன்கூட எடுக்க முடியாத நிலைமை உள்ளது. இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் பேசி நிவாரணம் கொடுப்பேன்.
நாடு ஒன்றாக இருக்கவேண்டுமானால் மகா சங்கத்தினர் ஒன்றாக இருக்க வேண்டும். இதர மதத் தலைவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். அது கவலைக்குரியது. நான் சொல்வதை யாரும் தவறாக எண்ண வேண்டாம்.
அண்மைய தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது. உயிரிழப்புக்கள் இடம்பெற்றன. பிரிவினை அதிகரித்தது.
தீவிரவாதிகள் இலக்கை அடையும் வகையில் செயற்பட்டனர். அவர்களின் நோக்கம் ஈடேற இடமளிக்க வேண்டாம்.
எந்தவொரு அரசியல்வாதியும் தேர்தலை இலக்காகக் கொண்டு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டக்கூடிய கருத்துக்களை வெளியிடக்கூடாது.
இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு தற்போது அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன்போது இனவாத, மதவாதக் கருத்துக்களை வெளியிடுதல் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுவெடிப்புக்களை நடத்திய தீவிரவாதிகளின் நோக்கங்களை வெற்றியடையச் செய்வதற்கு உதவியளிப்பதற்கு சமமாகும்.
இத்தகையதொரு பின்னணியில் நாட்டுக்காக ஒன்றிணைந்து அனைவரும் தத்தமது பொறுப்புக்களைச் சரிவர நிறைவேற்ற வேண்டும்.
நாட்டின் வன வளத்தைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு அரசியல் தலைவரும் மேற்கொண்டிராத தீர்மானங்கள் பலவற்றை கடந்த நான்கு வருடங்களில் நான் மேற்கொண்டுள்ளேன்.
சுற்றாடல் பாதுகாப்புக்கான அவ்வனைத்துத் தீர்மானங்களும் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கிலன்றி மனிதர்களின் உயிர்வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டன.
தச்சு வேலைத்தளங்கள், மர ஆலைகளுக்கான புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் நான் மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து பலரும் போதிய புரிந்துணர்வின்றி காணப்படுகின்றனர்.
நாட்டின் வனப் பரம்பல் துரிதமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக இன்னும் 15 – 20 வருடங்களுக்குள் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும். ஆகையினால், சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அரசியல் நோக்கங்களின்றி பிரச்சினைகளைத் தெளிவான கண்ணோட்டத்துடன் நோக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
கடத்தல்காரர்களே நாட்டில் 95 சதவீதமான காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மர ஆலைகளுக்காக வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களின் பேரிலேயே இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதிகளவிலான மரங்கள் வெட்டப்படுவதனால் நீர் ஆதாரங்களுக்கும் சுற்றாடலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றமை சூழலியலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகையினால் மக்களின் உயிரைப் போன்றே வன வளங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.
‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ செயற்திட்டத்தின் இன்றைய இறுதி நிகழ்வின்போது முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான காணி உறுதிகள் வழங்குதல், புதிய பயனாளி குடும்பங்களுக்கான சமுர்த்தி முத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதனிடையே, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லாவி மருத்துவமனையில் 37 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவை டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி திறந்துவைத்தார். முல்லைத்தீவு மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா பிராந்திய அலுவலகத்தையும் அவர் திறந்துவைத்தார்.
அமைச்சர்களான தயா கமகே, காமினி ஜயவிக்ரம பெரேரா, கயந்த கருணாதிலக, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், காதர் மஸ்தான், எஸ். சிவமோகன், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், முப்படை மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
மேலும், மகாவலி எல் வலயத்துக்குட்பட்ட வெலிஓயா கிரிஇப்பன்வெவ நீர்த்தேக்கம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் அதனை இன்று ஜனாதிபதி மக்களின் பாவனைக்காக கையளித்ததுடன், நீர்த்தேக்கத்தில் பத்தாயிரம் மீன்குஞ்சுகளையும் விடுவித்தார்.
மகாவலி எல் வலயத்தின் கிரிஇப்பன்வெவ பிரதேசத்தில் ஜனகபுர பிரிவில் 8 மீற்றர் நீளமான மின்சார வேலியை நிர்மாணிப்பதற்காக 55 இலட்சம் ரூபாபெறுமதியான காசோலையையும் ஜனாதிபதி இதன்போது வழங்கினார்.
2440 ஏக்கர் அடிகள் கொள்ளளவுடைய கிரிஇப்பன்வெவ நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 900 ஏக்கர் வயல் நிலங்களுக்கும் 520 குடும்பங்களுக்கும் நீர் வழங்கப்படுகின்றது.
30 வருடங்களின் பின்னர் இக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்காக 103 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.