30 ஆண்டு கால வழக்கில் இன்று தீர்ப்பு




குஜராத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டுக்கு, முப்பது ஆண்டு கால வழக்கொன்றில் ஆயுள் தண்டனை வழங்கி ஜாம் நகர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் கூடுதலாக 11 பேரை சாட்சியங்களை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிய சஞ்சீவ் பட்டின் மனுவை கடந்த வாரம் நீதிமன்றம் நிராகரித்தது.
உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்த சஞ்சீவ் பட், இந்த வழக்கில் நியாயமான ஒரு முடிவுக்கு வர இந்த 11 சாட்சியங்களின் விசாரணை மிக முக்கியம் என தெரிவித்திருந்தார்.
குஜராத் ஜாம்நகரில் 1990இல் நடைபெற்ற பந்த்தில் சில வன்முறைகள் நடைபெற்றன. அந்த நேரத்தில் சஞ்சீவ் பட் ஜாம்நகரின் மூத்த காவல்துறை கண்காணிப்பு அதிகாரியாக இருந்தார்.
அந்த வன்முறை தொடர்பாக காவல்துறை 100 பேரை கைது செய்தது.
அதில் ஒருவர் பிரபுதாஸ் மாதவ்ஜி வைஷ்ணவி. அவர் மருத்துமனையில் உயிரிழந்தார். அவரின் சகோதரர் அம்ரூத் வைஷ்ணவி சஞ்சீவ் பட் மீதும் பிற அதிகாரிகள் மீதும் காவலில் இருக்கும் போது சித்ரவதை செய்த வழக்கு தொடுத்திருந்தார்.
முன்னதாக 2011-இல், குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோதி அம்மாநில காவல்துறைக்கு உத்தரவு வழங்கியதாக உச்ச நீதிமன்றத்தில் சாட்சிப் பிரமாணம் அளித்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார்
இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் இருந்த சஞ்சீவ் பட், தனக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக சாட்சியமளிக்கும்படி பலவந்தப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகார் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக குஜராத் அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இந்த வாதத்தை ஏற்கமறுக்கிறார் குஜராத் மாநிலத்ததின் முன்னாள் டி ஜி பி ஸ்ரீகுமார். நரேந்திரமோடிக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று சாட்சியமளித்ததற்காகவே சஞ்சீவ் பட் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக அப்போது அவர் கூறினார்.
முன்னதாக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் முதலமைச்சராக இருந்த மோதியை விசாரிக்க வேண்டும் என அப்போது ஐபிஎஸ்ஸாக இருந்த சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.