தனது சிறுவயது முதல் கிரிக்கெட் வாழ்க்கை என தனது வாழ்வின் முக்கிய பாகங்கள் குறித்து `கேம் சேஞ்சர்' என்ற சுயசரிதையில் ஷாகித் அஃப்ரிடி பேசியிருக்கிறார். பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகையாளரான வஜாஹத் சயீத் கானுடன் இணைந்து அந்தப் புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். பாகிஸ்தான் அணிக்காக ஏறக்குறைய 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய அனுபவம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருந்த பிரச்னைகள், முன்னாள் கேப்டன்கள், அணிக்குள் இருந்த சர்ச்சைகள் முதல் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து அஃப்ரிடி விரிவாகவே அந்தப் புத்தகத்தில் பேசியிருக்கிறார்.
20 ஆண்டுகாலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடியிருந்தாலும் அஃப்ரிடியின் வயது குறித்த சர்ச்சை அவர் ஓய்வுபெறும் வரை ஓயவில்லை. பல்வேறு தரவுகளிலும் அவரின் பிறந்தநாள் மார்ச் 1, 1980 என்றுதான் இன்றுவரையில் இருக்கிறது. ஆனால், தன் சுயசரிதையில் தான் 1975-ம் ஆண்டு பிறந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் அஃப்ரிடி. இதன்மூலம் புதிய சர்ச்சையில் அவர் சிக்கியிருக்கிறார்.
அஃரிடி
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அறிமுகமான 1996-ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற நைரோபி டிரை சீரியஸையும் அந்தத் தொடரில் அவர் 37 பந்துகளில் சதம் விளாசியதையும் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தனது முதல் போட்டியிலேயே இந்த சாதனையை அவர் படைத்திருந்தார். 17 ஆண்டுகள் நீடித்திருந்தது அந்த சாதனை. 16 வயதில் அந்த சாதனையைப் படைத்ததாக அஃப்ரிடியைக் கொண்டாடியது கிரிக்கெட் உலகம். ஆனால், அப்போது அவருக்கு உண்மையான வயது 20-க்கும் மேல் என்று தற்போது தெரியவந்திருக்கிறது. அதேபோல், நைரோபி டிரை சீரியஸுக்கு முன்னால், அவர் பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும் விளையாடியிருந்தார்.
தனது வயது குறித்து சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் அஃப்ரிடி, `அந்த சாதனையைப் படைக்கும்போது எனக்கு வயது 19; அவர்கள் கூறுவது போல் 16 அல்ல. நான் 1975-ம் ஆண்டு பிறந்தேன். உண்மைதான். எனது வயதை அவர்கள் தவறாகக் கணக்கிட்டுவிட்டார்கள்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். அஃப்ரிடியின் கூற்றுப்படி பார்த்தால் அப்போது அவருக்கு 19 வயது என்று குறிப்பிடுவதும் தவறுதான். அவருக்கு அப்போது 20 அல்லது 21 வயதாகி இருக்க வேண்டும். அதேபோல், பாகிஸ்தான் அணிக்காக அவர் கடந்த 2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடினார். அப்போது அவருக்கு வயது 36 அல்ல, 40 அல்லது 41 ஆக இருக்க வேண்டும்.
வக்கார் யூனுஸுடன் அஃப்ரிடி
Photo Credit: Cricket.Com.au
அதேபோல், கடந்த 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் வக்கார் யூனஸ் தலைமை ஏற்றிருந்ததால்தான் பாகிஸ்தான் அணியால் சிறப்பாகச் செயல்படமுடியவில்லை என பகிரங்கமாக அவர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். வக்கார் யூனஸ் தலைமைப் பண்பு இல்லாதவர், அவரால் அணியை ஒருங்கிணைக்க முடியவில்லை என்று அஃப்ரிடி குறிப்பிட்டிருக்கிறார். கேப்டனாக அவர் சரியாகச் செயல்படவில்லை என்றாலும் அவர் ஒரு நல்ல பயிற்சியாளர் என்றும் அஃப்ரிடி கருத்து தெரிவித்திருக்கிறார். வாசிம் அக்ரம் கேப்டனாக இருந்திருக்க வேண்டியது என்றும், ஆனால், அப்போதைய பிசிபி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தௌகீர் ஜியாவின் ஆசியால் வக்கார் யூனஸ் அந்த இடத்துக்கு வந்ததாகவும் அஃப்ரிடி கூறியிருக்கிறார்.
அதேபோல், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட் தன்னை சரியாக நடத்தவில்லை என்றும் அவர் தன்னை ஸ்மால் மேன் (Small Man) என்றே அழைத்ததாகவும் அஃப்ரிடி குறிப்பிட்டிருக்கிறார். அவர் தன்னை வலைப்பயிற்சியில் ஈடுபடக்கூட ஒரு சில நேரம் அனுமதித்தில்லை என்று குறிப்பிட்டிருக்கும் அஃப்ரிடி, தனது சிறப்பான செயல்பாடுகளால் தமக்கு மரியாதை கொடுக்க வேண்டிய சூழலுக்கு மியான்டட் தள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இம்ரான் கான்
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானைப் பாராட்டியிருக்கும் அஃப்ரிடி, காஷ்மீர் விவகாரத்தில் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார். `காஷ்மீர் பாகிஸ்தானுக்கோ அல்லது இந்தியாவுக்கோ சொந்தமல்ல; அது காஷ்மீரிகளுக்கே சொந்தம்' என்றும் அஃப்ரிடி கருத்து தெரிவித்திருக்கிறார்.
அஃப்ரிடி ட்வீட்
சர்ச்சை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஃப்ரிடி, ``கேம் சேஞ்சர் புத்தகம் ஏற்கெனவே அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. நான் ஊடகங்கள் கொடுக்கும் அதீத வெளிச்சம் குறித்துப் பேசவிரும்பவில்லை. எனது வாழ்க்கை குறித்து வஜாஹத் சயீத் கானும் நானும் எழுதியிருப்பதைப் பாராட்ட அந்தப் புத்தகத்தை வாங்கிப் (எனது முதல் பிரதி இன்னும் கிடைக்கவில்லை) படியுங்கள். சிலரைக் கடினமாக நான் அணுகியிருந்தாலும், யாருக்கு சரியான பாராட்டு போய்ச்சேர வேண்டுமோ அவர்களை நான் பாராட்டியிருக்கிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Post a Comment
Post a Comment