#இம்ரான் குரேஷி
இந்தியா கேரளாவில் கல்வி நிறுவனம் ஒன்று, பெண்கள் புர்கா அணியக்கூடாது என்று தடை செய்திருப்பது நாடு முழுவதும் புர்காவை தடை செய்ய வேண்டுமா என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் சுமார் 100 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நடத்தி வருகிறது முஸ்லிம் படிப்பு சங்கம். தனிநபர் உரிமைகளைவிட, கல்வி நிறுவனங்களின் உரிமைகள் பெரிது என்ற 2018ஆம் ஆண்டு கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பை இந்நிறுவனம் பின்பற்றியுள்ளது.
"நாங்கள் அறிவித்த தடை உத்தரவுக்கும், இலங்கை விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி இதுகுறித்து எங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தோம். புர்கா அணிவதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்கிறார் பிபிசி இந்தி மொழி சேவையிடம் பேசிய முஸ்லிம் படிப்பு கழகத்தின் தலைவர் ஃபசல் கஃபூர்.
ஆனால், சமஸ்த கேரள ஜமய்துல் உலமா இந்த முடிவினை எதிர்த்துள்ளது. "மாணவர்கள் புர்கா அணியக்கூடாது என்று இவர்கள் சொல்ல முடியாது. புர்கா அணிந்துக்கொள்வது அவர்களது சுதந்திரம்" என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான தாயிப் ஹுடாவி தெரிவித்தார்.
இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, முகத்தை மூடும் ஆடைகள், அதாவது புர்கா அணிய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், இக்கல்வி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பது விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் முடிவுக்கு, அந்நாட்டு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு தந்துள்ளனர். அதனையடுத்து இந்தியாவிலும் அதனை பின்பற்ற வேண்டும் என்று சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவட் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கேரளா உயர் நீதிமன்றம் என்ன கூறியது?
ஃபாத்திமா தஸ்னீம் மற்றும் ஹஃப்சாஹ் பர்வீண் என்ற 18 வயதுக்குட்பட்ட இரு பெண்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் கிரைஸ்ட் நகர் சீனியர் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள். முழு கை வைத்த சட்டை மற்றும் தலையை மூடும் ஆடை ஆகியவற்றை அணிய தங்கள் பள்ளி தங்களை அனுமதிக்கவில்லை என்று கூறியிருந்தனர். அவர்களுக்கு அனுமதி வழங்காததையடுத்து அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நீதிபதி முஹமெத் முஸ்தக் அளித்த தீர்ப்பில், மாணவர்கள் அவர்களது விருப்பம் போல் உடை அணிவது அவர்களது உரிமை என்பது போல, பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிவதை உறுதி செய்வது அப்பள்ளியின் உரிமை என்று குறிப்பிட்டார்.
"பெரும்பானவர்களின் விருப்பம் பெரும்பகுதியளவிலான மக்களை பிரதிபலிக்கிறது. அதன் கீழ் உள்ளவர்களின் விருப்பம் தனி நபர்களின் விருப்பத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. பெரும்பாலனவர்களின் விருப்பத்தை விட, தனிநபர்களின் விருப்பம் முக்கியத்துவம் பெற்றால், அது குழப்பத்தில் முடியும்" என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கில் பெரும்பகுதி அளவிலான மக்களின் விருப்பம் என்பது கல்வி நிறுவனத்தினுடையது. நிறுவனத்தை சுதந்திரமாக நடத்த மற்றும் நிர்வாகிக்க அவர்களால் இயலவில்லை என்றால், அது அவர்களது அடிப்படை உரிமையை மறுப்பதாகும் என்று நீதிபதி முஸ்தக் தீர்ப்பளித்தார்.
விவாதம்
புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முடிவை முஸ்லிம் படிப்பு கழகம் இந்தாண்டு எடுத்தது ஏன்? "கடந்தாண்டு இரண்டு மாணவிகள் புர்கா அணிந்து வந்தார்கள், ஆனால், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். கையேட்டில் இதுகுறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்பதால், நாம் அதை எதிர்க்க முடியாது என்று மாணவர் சேர்க்கை மேற்பார்வைக்குழு கூறியது. தற்போது ஜூன் மாதத்தில் இருந்து மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. தற்போது எங்களுக்கு கீழிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கான கையேட்டில் இதை குறிப்பிடுவது முக்கியம் என்று கருதினோம்" என்கிறார் கஃபூர்.
"ஹிஜாப் என்பது ஒரு ஆடைதான். தற்போது அது ஃபேஷனாகிவிட்டது. மேலும் புர்கா என்பது வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த வழக்கம் இருக்கவில்லை. வளைகுடா நாடுகளில் இருந்து இங்கு திரும்புபவர்கள் இதனை இங்கு கொண்டு வந்தார்கள்" என கஃபூர் கருதுகிறார்.
முஸ்லிம் குருமார்கள் இதுகுறித்து கவலைப்படக்கூடாது என்று நினைக்கும் அவர், பெண்கள் ஏன் முகத்தை மூட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். அது ஒரு பழமைவாத சிந்தனை என்றும் கஃபூர் குறிப்பிடுகிறார்.
ஆனால், பெண்கள் தங்களது பாதுகாப்பிற்காக தங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து முகத்தை மறைத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் சமஸ்த கேரள ஜமய்துல் உலமா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தாயிப் ஹுடாவி. பெண்கள் முகத்தை மூடக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது என்று அவர் தெரிவிக்கிறார்.
"உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இதன் மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது" என்றார்.
இஸ்லாமிய மதத்தில் புர்கா அணிவது கட்டாயமா?
"இறையியல் ரீதியாக பார்த்தால் உலமாக்களுள் இதில் ஒற்றுமையான கருத்து இல்லை. இதுதான் சரி என்று இல்லை" என்கிறார் பிபிசி இந்தி மொழி சேவையிடம் பேசிய NALSAR சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசியர் ஃபைசன் முஸ்தபா.
"புர்கா அணிந்து கொள்வது என்பது அவரவர்களது தனிப்பட்ட தேர்வு என்று நினைக்கிறேன். யாராவது அணிய வேண்டுமானால், அதனை எதிர்க்கக் கூடாது. எந்த முடிவையும் நீங்கள் திணிக்க முடியாது. எதையாவது நீங்கள் தடுத்தால், அதனை செய்ய மக்கள் ஏதேனும் ஒரு வழியை கண்டுபிடிப்பார்கள். மேலும், பழமைவாத உலமாக்களின் தாக்கம் அந்த சமூகத்தில் உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
படித்த பெண்கள், இது அவரவர் விருப்பம் என்று நினைக்கிறார்கள். மறுபக்கத்தில் அவ்வளவாக படித்திராத பெண்கள் இந்த வழக்கத்தை விட்டு வருகிறார்கள். ஆனால், இதனை நீங்கள் அரசியல் சாசன ரீதியாக எதிர்க்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
இலங்கையில் புர்கா தடை செய்யப்பட்டதற்கு காரணம், அங்கு நடந்த தீவிரவாத தாக்குதால்தான் என்றும் பேராசியர் முஸ்தஃபா தெரிவிக்கிறார்.
Post a Comment
Post a Comment