கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலையில் தொடங்கிய நிலையில், 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறுகிறது.
2018 டிசம்பரில் சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்த நிலையில் தற்போதைய மக்களிவை தேர்தல் முடிவுகளில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2011 வரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியில் இருந்த மேற்குவங்கத்தில் பாஜக இம்முறை வலுவாக காலூன்றியுள்ளது.
2014 மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியைவிட இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பாஜக வெல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை என பல அம்சங்களில் பாஜக மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்த நிலையில், பாஜகவின் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் பிபிசி தமிழிடம் பேசினர்.
டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பிரமோத் ஜோஷி இது குறித்து கூறுகையில், ''கடந்த 2014 தேர்தலைவிட இம்முறை கூடுதல் இடங்களை வெல்கிறது பாஜக'' என்றார்.
''கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவுக்கு பாஜக வாக்கு சதவீதம் பெறலாம். இதற்கு முக்கிய காரணம் அந்த கட்சி தனது ஆதரவு கட்டமைப்பை நாடு முழுவதும் பரவலாக்கியுள்ளதுதான்'' என்று அவர் தெரிவித்தார்.
''வட மற்றும் மேற்கு மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதற்கு, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அக்கட்சி முன்னெடுத்த தேசியவாதம் மற்றும் நாட்டுப்பற்று குறித்த கோஷங்கள் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளதாக கருதுகிறேன்.`` என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ``காங்கிரஸ் கட்சியால் பாஜகவின் தவறுகளை மக்களிடம் சரியான முறையில் எடுத்துச் செல்ல முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், சமூகவலைத்தளங்களை பாஜகவே மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தியது. இது அக்கட்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்``
``சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அண்மை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள போதிலும்,புல்வாமா மற்றும் பாலகோட் சம்பவங்களுக்கு பிறகு அம்மாநில மக்களின் மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன்`` என்று அவர் கூறினார்.
இதனால் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகளுக்கு வரும் காலத்தில் ஆபத்து ஏற்படலாம்.
அதேவேளையில் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி கட்சிகளுக்கு பொதுவாக வாக்களித்து வந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூக மக்களிடம் தற்போது பாஜகவுக்கும் ஒரு ஆதரவு நிலை காணப்படுகிறது. இந்த ஆதரவு நிலையை ஏற்படுத்த அக்கட்சி கடுமையாக உழைத்துள்ளது. அக்கட்சியின் இந்த பிரச்சாரத்தை கவனிக்க எதிர்கட்சிகள் தவறியுள்ளன என்று அவர் உத்தரபிரதேச தேர்தல் முன்னிலை நிலவரங்கள் குறித்து தகவல் தெரிவித்தார்.
ஆனால் பாஜகவால் ஊடுருவ முடியாத மாநிலங்கள் கர்நாடகத்தை தவிர்த்து தென்மாநிலங்கள்தான். வரும் காலத்தில் இம்மாநிலங்களில் தனது ஆதரவு நிலையை அதிகரிக்க பாஜக பல யுக்திகளை கையாள வாய்ப்புள்ளது என்று கூறினார்.
பல மாநிலங்களிலும் பாஜக பெற்ற அமோக முன்னிலை நிலவரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த செய்தியாளர் இளங்கோவன்,``பாஜக வென்றதற்கு மூன்று காரணங்கள் உண்டு. முதல் காரணம் நரேந்திர மோதி அளவிற்கு காங்கிரஸ் அல்லது எந்த எதிர்கட்சியாலும் மக்கள் மத்தியில் ஒரு மிக பிரபலமான தலைவரை முன்னிறுத்த முடியவில்லை`` என கூறினார்.
``ஒரு கட்டத்தில் இந்திய மக்களவை தேர்தலை அமெரிக்க அதிபர் தேர்தல் போல் பாஜக மாற்றிவிட்டது என்றே கூறலாம். மோதியா? ராகுலா? என்ற கேள்வியை நாட்டின் மூலை முடுக்குக்கும் எடுத்துச் சென்று, பாஜக அதில் வெற்றி கண்டுள்ளது என கூறலாம்`` என அவர் கூறினார்.
``மேலும் எதிர்கட்சிகளினால் ஒரு பலமான கூட்டணியை உருவாக்க முடியவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்த ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்ற கோஷம் எடுபடாமல் போனது இந்த தோல்விக்கு காரணமாக இருக்க கூடும். இதனால்தான் உத்தர பிரதேசம் போன்ற மாநிலத்தில் பாஜகவால் பெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற முடிந்தது``
``மூன்றாவது காரணம், புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு வட மற்றும் மேற்கு மாநிலங்களில் பாஜக முன்னெடுத்த இந்தியம், தேசியம் போன்ற கோஷங்கள் அக்கட்சிக்கு வெகுவாக கை கொடுத்துள்ளது என்றே கூறலாம்``என்று கூறினார்.
``வரும் காலத்தில் தாங்கள் வெல்லாத மற்ற மாநிலங்களிலும் பாஜக கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். காங்கிரஸ் கட்சி, பாஜகவை வீழ்த்த மிகமிக கடினமாக உழைக்க வேண்டும். அது மிக அண்மைய வருங்காலத்தில் சாத்தியமாகுமா? என்று தெரியவில்லை`` என்று இளங்கோவன் கூறினார்.
இதனிடையே மேற்குவங்கத்தில் பல தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறித்து பேசிய பத்திரிக்கையாளர் அனில் சாட்டர்ஜி, ``திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்ட இடதுசாரி உட்பட எதிர்கட்சி ஆதரவாளர்கள் அக்கட்சியை வீழ்த்த பாஜகவே சிறந்த தேர்வு என்று எண்ணியிருக்கலாம்`` என்று கூறினார்.
``முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியில் இருந்த மாநிலம் மேற்கு வங்கம். இங்கு இந்தளவு மிகப்பெரிய வெற்றியை நோக்கி பாஜக செல்வது மிக முக்கியமான அரசியல் திருப்புமுனை`` என்றார்.
``இதனால் மேற்கு வங்கத்தில் வருங்காலத்தில் பாஜக ஆட்சியமைக்கவும் முயற்சி செய்யக்கூடும். இது அக்கட்சியின் பிரச்சாரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்`` என தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மிக சில மாநிலங்களை தவிர பல மாநிலங்களில் பாஜக பெரும் அளவில் வெற்றிபெற்றிருப்பது அக்கட்சியின் பிரச்சாரத்துக்கும், ஒருங்கிணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பலப்படுத்தும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியே என்பது சில அரசியல் விமர்சர்களின் கருத்தாக உள்ளது.
Post a Comment
Post a Comment