முஸ்லிம்கள் மீது காடையர்கள் தாக்குதல்: படையினர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?




“கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் காடையர்களின் தாக்குதலுக்குள்ளாகின்ற செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைகின்றது. ஊரடங்குச் சட்ட நேரத்திலும் பாதுகாப்புப் படையினர் இந்த வன்செயல்களைத் தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது.”
– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“வன்முறையாளருக்கு எதிராக உடனடியானதும் கடுமையானதுமான நடவடிக்கைகளை அதிகாரத்திலுள்ளோர் எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.
அரசு தம்மைப் பாதுகாக்கத் தவறுகின்றது என்று மக்கள் நினைத்தால் அவர்கள் தம்மைத் தாமே பாதுகாக்கத் தலைப்படுவார்கள். இப்படியான சூழ்நிலையை அனுமதிக்க வேண்டாம் என்று நாம் அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த நாட்டில்தான் சுயமாக வாழ்வதற்குப் போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என்று இன்னுமொரு சமூகத்தையும் நினைக்கத் தூண்டாதீர்கள். கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, பள்ளிவாசல்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி – எவ்விதமான பயங்கரவாதத்துக்கும் இந்த நாட்டிலே இடமிருக்கக்கூடாது” – என்றுள்ளது.