ராஜினாமாக் கடிதம் கொடுத்தார், ராகுல்




காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் காரிய கமிட்டியின் முன்பு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்ததாகவும், அதை அந்தக் கமிட்டி ஒரு மனதாக நிராகரித்ததாகவும், இன்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டத்து பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
குலாம் நபி ஆசாத், ஏ.கே.ஆண்டனி, செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுரேஜ்வாலா உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
இன்று நடந்த கூட்டத்தில் தங்களுக்கு வாக்களித்த 12.13 கோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தும், கட்சியை சீரமைக்க ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தேர்தல் முடிவின் மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள சவால்கள், தோல்விகள் மற்றும் குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் காரிய கமிட்டி தெரிவித்துள்ளது.
தேர்தல் பணியாற்றிய காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்தது என்ன என்பது குறித்தும் விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடியது. இதில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், மலிகார்ஜுன கார்கே, மீரா குமார், ப.சிதம்பரம் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் செயற்குழுபடத்தின் காப்புரிமைTWITTER / CONGRESS
Image captionகாங்கிரஸ் செயற்குழு
அப்போது ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்த விலக ராஜிநாமா கடிதம் வழங்கியதாகவும், ஆனால் அதனை ஏற்க காரிய கமிட்டி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இத்தகவலை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் மறுத்துள்ளார். ராகுல் காந்தி ராஜிநாமா கடிதம் ஏதும் வழங்கவில்லை என்று ரந்தீப் சிங் தெரிவித்ததாக ஏஎன்ஐ கூறியுள்ளது
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக, கடந்த வியாழக்கிழமையே ராகுல் காந்தி கடிதம் அளித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை சோனியா காந்தி தடுத்ததாக கூறப்பட்டது. எனினும், இது உண்மையல்ல என்று அக்கட்சி மறுத்துவிட்டது.
தேர்தல் முடிவுகள்
முன்னதாக வியாழக்கிழமை   வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளை மட்டுமே வென்றது. 
இந்தியாவின் மேற்கு மற்றும் வட மாநிலங்களில் வலுவான பகுதிகளை பாஜக தக்க வைத்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி, கிழக்கிலும், தெற்கிலும்கூட புதிதாக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
ராகுல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்கு கிடைத்துள்ள இடங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே அதிகரித்திருக்கிறது.
ராகுல் காந்தி தமது குடும்பத்தினரின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார். 1999க்குப் பிறகு முதல் முறையாக அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு மூன்றாவது முறையாக அங்கு அந்தக் கட்சி தோல்வியை சந்தித்திருக்கிறது.
தென்னிந்தியா கை கொடுக்காமல் போயிருந்தால், இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான தோல்வியை அந்தக் கட்சி சந்திக்க நேரிட்டிருக்கும்.
அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ள 50க்கும் சற்றும் அதிகமான இடங்களில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்கள் மட்டும் ஏறத்தாழ 30 இடங்களைக் கொடுத்திருக்கின்றன. மீதி இடங்களில் பெரும்பாலானவை பஞ்சாப் மாநிலத்தில் கிடைத்துள்ளன.
ஆனால் உத்தர பிரதேசம், பிகாரில் ஏறத்தாழ அந்தக் கட்சி துடைத்தெறியப் பட்டுள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நிலைமையை சாதகமாக்கிக் கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற போதிலும், இப்போது தோல்வியை சந்தித்துள்ளது.