(காரைதீவு நிருபர் சகா)
கிழக்கில் பாரிய குண்டுத்தாக்குதலுக்காக சாய்ந்தமருதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இனங்கண்டு கொன்றொழிப்பதற்கு தகவல்வழங்கிய போக்குவரத்துப்பொலிஸ் பொலிசார் ஒருவருக்கு அரசாங்கம் பதவியுயர்வையும் 5லட்சருபா சன்மானத்தையும் வழங்கிக் கௌரவித்தது.
மொனராகலையைச்சேர்ந்த கல்முனைப் பொலிஸ்நிலைய போக்குவரத்துப்பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யு.டி.சுமிந்த நிஹால் வீரசிங்க என்பவரே அப்பாராட்டைப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தராவார்.
பாரிய அனர்த்தமொன்றைத் தவிர்ப்பதற்கு காரணமாகவிருந்த இப்போலிஸ் உத்தியோகத்தருடன் மேலும் தகவல்வழங்கிய பொதுமக்கள் மூவருக்கும் தலா 10லட்சருபா சன்மானம் பொலிஸ் திணைக்களத்தினால் நேற்றுமுன்தினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
சாய்ந்தமருதில் பதுங்கிய பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய அப்பகுதி மக்கள் தேசபக்தியுடையவர்கள் என பதவி உயர்வுடன் பணப் பரிசு பெறும் கல்முனைப் பொலிஸ்நிலையத்தைச்சேர்ந்த போக்குவரத்துப்பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யு.டி.சுமிந்த நிஹால் வீரசிங்க மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் நேற்றுமுன் தினம் (3) தனக்கு கிடைக்கப்பெற்ற பதவியுயர்வு மற்றும் வெகுமதி தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் இவ்வாய்ப்பு அதிஸ்டம் எனது மக்கள் தொடர்பாடலுக்கு கிடைத்த வெகுமதி என கூறினார்.
தற்போது சார்ஜண்டாகப் பதவியுயர்வுபெற்ற அவர் மேலும் தெரிவித்ததாவது:
மொனராகலை மாவட்டத்தில் எத்திமலே கிராமத்தில் பிறந்த நான் 2009 ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இலங்கை பொலிஸில் இணைந்து கொண்டேன்.இளமையிலிருந்தே மக்களுடன் அன்பாகப்பழகும் சுபாவம் கொண்டவன் நான்..
கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு 2015 ஆண்டு காலப்பகுதியில் தொழிலுக்காக வந்தேன். அன்றிலிருந்து இப்பிரதேசத்தில் பணியாற்றறிவருகிறேன். அவ்வாறு பணியாற்றும் போது அன்றைய தினம்(26) அன்று தேசபக்தி மிக்க மக்களில் இருவர் என்னை சந்தித்து சம்பவத்தை விபரித்தனர்.
அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற நான் அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை அறிந்து உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியதனால் பாரிய அழிவு ஒன்று தடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போது ஆறுதலாக உள்ளது. என மகிழ்ச்சியுடன் கூறினார்.
மேற்குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது சார்ஜன்ட் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட மகிழ்ச்சியுடன் தனது பெற்றோர் விவசாயம் செய்தே தனக்கு கல்வி கற்பித்ததாகவும் குடும்பத்தில் இரண்டு அண்ணாக்களுடன் தான் 3 ஆவது பிள்ளை என குறிப்பிட்டார்.
36 வயதை உடைய டபிள்யு.டி.சுமிந்த நிஹால் வீரசிங்க 2009 ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இலங்கை பொலிஸில் இணைந்து கொண்டுள்ளார்.மொனராகலை மாவட்டத்தில் எத்திமலே கிராமத்தில் உள்ள எத்திமலே மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார்.இவர் கல்முனை பிரதேச மக்களுடன் நட்புடன் பழகுகின்ற போக்குவரத்து துறை பொலிஸ் உத்தியோகத்தராவார்.
Post a Comment
Post a Comment