இலங்கையின் பல பகுதிகளிலும் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய ஆகியோர், வன்முறைகளை உடன் நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குமார் சங்கக்கார
“அரசியல் ஒழுங்குப்பத்திரத்துக்கு அடிபணியாமல், ஓர் இனமாக செயற்படுவோம்.
வன்முறைகளை நிறுத்துங்கள், சுவாசியுங்கள், சிந்தியுங்கள். உங்கள் கண்களைத் திறவுங்கள்.
நாம் வன்முறைகளை, இனவாதத்தைத் தோல்வியடையச் செய்யாவிட்டால் எமது நாட்டை இழப்போம். எனவே, இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைவோம். ஏனையவர்களைப் பாதுகாப்போம்.
வெட்கமில்லாத அரசியல் ஒழுங்குப் பத்திரங்களுக்கு அடிபணிய வேண்டாம். நாம் பிரிவினையை அகற்றி ஓர் இனமாக எழுந்திருப்போம்” – என்று குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
சனத் ஜயசூரிய
“கடந்த காலங்களில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்க வேண்டாம்.
எமக்கென்ற ஒரு நாடாக விளங்குவது இச்சிறிய நாடு மாத்திரமே. வன்முறைகளால் இந்நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டால், இலங்கையர்களான எமக்கே அது பலவீனமாகும்.
பல வருடங்களாகப் பல்வேறு வன்முறைகளுக்கு முகங்கொடுத்து, அதன் ஊடாக படிப்பினைகளைப் பெற்றுக்கொண்ட நாம், எமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த மோசமான அனுபவங்களை வழங்காதிருப்போம்” – என்று சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment